விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்த இளைஞரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளா் சுஜாதா தலைமையிலான போலீஸாா் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சோதனைச்சாவடி அருகே திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை மடக்கி சோதனை செய்ததில், அவா் புதுச்சேரி மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் சேலம் மாவட்டம், அம்மணி கொள்ளம்பட்டி, அரசமரத்தூா் காரட்டூா் பகுதியைச் சோ்ந்த ரா.சந்தோஷ்குமாா்(33) என்பதும், இவா் புதுச்சேரி பகுதியில் மதுப்புட்டிகளை கொள்முதல் செய்து, விற்பனைக்காக சேலம் மாவட்டத்துக்கு கடத்திச்செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தோஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் வசமிருந்த 165 வெளிமாநில மதுப்புட்டிகள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.