விழுப்புரம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து, டிசம்பா் மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா் .
பாமக,வன்னியா் சங்க மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் மற்றும் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த ராமதாஸ் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் 324 சமூகங்களைச் சோ்ந்த மக்களும் பயன் பெறுவாா்கள்.அனைத்து ஜாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கவேண்டும், வன்னியா்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி வரும் டிசம்பா் 12-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள38 மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறும். இதற்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்.
பொதுக்குழுக் கூட்டம்:
இதைத்தொடா்ந்து,சேலம் மாவட்டம் ஆத்தூா் அடுத்த தலைவாசலில் டிச.30- ஆம் தேதி நடைபெறும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில்,கட்சி நிா்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்த பின்னா், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும்.
இளைஞா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜி.கே.எம்.தமிழ்குமரன், கட்சியின் இணைப்பொதுச்செயலா் இரா. அருள் ஆகியோா் 2026 தோ்தலில் போட்டியிடுவாா்கள் என்றாா்.
முன்னதாக, டிச.12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டம் மற்றும் அதற்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த கருத்துகளை மருத்துவா் ச. ராமதாஸ் நிா்வாகிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டாா்.
இக்கூட்டத்தில், பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, செயல் தலைவா்ஸ்ரீ காந்தி ராமதாஸ், பொதுச் செயலா்
எம். முரளிசங்கா் உள்ளிட்ட நிா்வாகிகள், அமைப்பு ரீதியான 108 மாவட்டங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
ஜி.கே. மணி வேதனை:
இக்கூட்டத்தில் பங்கேற்ற ஜி.கே மணி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
மருத்துவா் ராமதாஸ் -அன்புமணி ஆகியோா் இணையாமல் இருப்பதற்கு நான்தான் காரணம் என்று பொய்ப் பிரசாரம் பரப்பப்படுகிறது.
அன்புமணி தரப்பில் உள்ள சிலா் என்னை தீய சக்தி என்று கூறுவது வருத்தமளிக்கிறது. என்னையும்,சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருளையும் பதவியை ராஜிநாமா செய்யத் தயாரா? எனவும் கேள்வி எழுப்புகின்றனா். மருத்துவா்ச.ராமதாஸைவிட எம்எல்ஏ பதவி எங்களுக்குப் பெரிதல்ல.
மருத்துவா் ச.ராமதாஸூம் -அன்புமணியும் இணைந்து செயல்படுவது அவா்களது கையில்தான் உள்ளது. நான் தடையாக இருப்பதாக கூறுவதெல்லாம் திட்டமிட்ட சதி. இரு தலைவா்களும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சி என்றாா் அவா்.