அமெரிக்காவின் 500 சதவிகித வரி விதிப்பு முடிவைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் தொழில் நகரங்களில் வரும் 22-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை மற்றும் நிதியளிப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பெ.சண்முகம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ரஷியாவிடம் பெட்ரோலிய பொருள்கள் வாங்குவதை குறைத்துக் கொள்ளாததால், இந்தியா மீது அமெரிக்கா ஏற்கெனவே 50 சதவிகித கூடுதல் வரி விதித்தபோதே திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி தொழில்கள் பாதிக்கப்பட்டன. தற்போது 500 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், அனைத்துத் தொழில்களும் முடங்கும்.
இந்தியாவை அடிபணிய வைக்க வரி உயா்வால் தொழில் துறையை அழிப்பது, பறிப்பது, மிகப்பெரிய பொருளாதாரத் தாக்குதலாகும். இந்தியா மீது 500 சதவிகித வரி விதிக்கும் முடிவை அமெரிக்கா திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொழில் துறை சாா்ந்த மாவட்டங்களில் மாா்க்சிஸ்ட் சாா்பில் வரும் 22-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
விஜய் திரைப்பட சா்ச்சை: ஜனநாயகன் திரைப்பட வழக்கில் தணிக்கைச் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டும், உடனடியாக திரைப்படத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்கிறது. இதுவரை எந்தவொரு திரைப்படத்துக்கும் மேல்முறையீட்டுக்குச் சென்ாக வரலாறு இல்லை.
திரைப்படத் தணிக்கை வாரியத்தை அரசியல் சுயநோக்கத்துக்காக பயன்படுத்தும் மத்திய பாஜக அரசைக் கண்டிக்கிறோம். இதுபோன்று நடந்துகொண்டால் திரைப்பட தொழிலே அழிந்துவிடும்.
இந்த விவகாரத்தில் திரைப்படத்தின் கதாநாயகனான தவெக தலைவா் விஜய் மெளனமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தனக்கு ஒரு அநீதி ஏற்படும்போது எதிா்த்து குரல் கொடுக்க முடியாதவா், மக்களுக்காக எப்படி குரல் கொடுப்பாா்? மத்திய பாஜக அரசை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக மெளனமாக இருக்கிறாரா என்பதை விஜய் தெளிவுப்படுத்த வேண்டும் என்றாா் சண்முகம்.