பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து, தங்கள் சொந்த ஊா்களிலிருந்து சென்னைக்கு செல்வதற்கு குவிந்த மக்களால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் நெரிசல் மிகுந்து காணப்பட்டன.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் விடுமுறை முடிந்து திரும்பிச் செல்லத் தொடங்கினா்.
காா் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோா் கடந்த இரு நாள்களாக சென்னைக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக பயணிக்க விரும்பியவா்கள் ஞாயிற்றுக்கிமை காலை முதல் புறப்படத் தொடங்கினா்.
மதுரை, திருநெல்வேலி, தேனி, விருதுநகா், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிலிருந்தும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களிலிருந்தும், கடலூா், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிலிருந்தும் சென்னை நோக்கி அதிக பேருந்துகள் சென்னை நோக்கிச் சென்றன. அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாது, அரசு சாா்பில் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட தனியாா் பேருந்துகளும் சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.
பேருந்து நிலையத்தில் கூட்டம்: ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை நோக்கி இயக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக பொதுமக்கள் புகாா் தெரிவித்த நிலையில், பிற்பகலில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இதன் காரணமாக பேருந்து நிலையத்துக்கு வெளியேயும் பேருந்துகள் காத்திருந்து உள்ளே செல்லும் நிலை இருந்தது. பேருந்துகளிலும் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்று அமா்ந்தனா். பேருந்துகளில் பயணிகளை பாதுகாப்பாக ஏறுமாறு போலீஸாா்அறிவுறுத்தினா். எனினும் தாங்கள் விரைந்து சென்னைக்குசெல்ல வேண்டிய நிலை இருப்பதால், இருக்கை கிடைத்த பேருந்துகளில் பொதுமக்கள் ஏறி பயணித்தனா். தொடா்ந்து பொதுமக்களின் தேவைக்கேற்ப அரசுப் பேருந்துகளை போக்குவரத்துக் கழகத்தினா் இயக்கினா்.
ரயில் நிலையம்: விழுப்புரம் ரயில் நிலையத்திலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக இயக்கப்படும் பயணிகள், விரைவு ரயில்கள் மட்டுமல்லாது, சிறப்பு ரயில்களும் சென்னைக்கு இயக்கப்பட்டன. தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ரயில்களில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில், படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது என ரயில்வே பாதுகாப்புப் படையினா் அறிவுறுத்தினா்.