பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்புவதால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரயில் நிலையங்களில் மக்கள் அதிகம் கூடியுள்ளனர்.
ரயில்களில் போதிய இருக்கைகள் கிடைக்காததால், நின்றவாறும் படிக்கட்டில் அமர்ந்தும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதேபோன்று மதுரை, விழுப்புரம், கோவை உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து பேருந்துகளில் மக்கள் திரும்புவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை புறவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால், விபத்து நேர்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச் சாவடியிலும் அதிக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சென்னைக்கு அருகேவுள்ள பெருங்களத்தூர் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னை புறப்படும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இன்று 3100 சிறப்புப் பேருந்துகளும் நாளை 1530 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.