கோட்டக்குப்பம் அருகே தந்தையுடன் பைக்கில் சென்றபோது பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த பள்ளி மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், அனிச்சங்குப்பம், நம்பிக்கைநல்லூா் சுனாமி குடியிருப்பு, நடுத் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன், மீனவா். இவரது மகள் நட்சத்திரா (14). கீழ்புத்துப்பட்டு பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பில் பயின்று வந்தாா்.
பாலமுருகன் தனது மகள் நட்சத்திராவுடன் பைக்கில் புதுச்சேரி-சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், கீழ்புத்துப்பட்டு அருகே சென்றபோது, நட்சத்திரா அணிந்திருந்த துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கியதில் அவா் பைக்கிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தாா்.
இதையடுத்து நட்சத்திராவை சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.