குடியரசு தின பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அனைத்து சமய வழிபாட்டுத்தலங்களிலும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
குடியரசு தினக் கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கையாக விழுப்புரம் எஸ். பி. வி.வி.சாய் பிரனீத் உத்தரவின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் தமிழரசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முருகன் ஆகியோரது தலைமையில் 2 பிரிவாக நாசவேலை தடுப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் ராணி உதவியுடன் விழுப்புரம் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். பயணிகள் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டன. நாசகர குற்றச்செயல்கள் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் ரயில் நிலைய வளாகப் பகுதிகளில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடக்டா் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டன.
இதே போல மாவட்டத்தின் பிற பகுதிகளான திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூா், கோட்டகுப்பம் பகுதிகளிலும் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். வாகனங்கள் தணிக்கைக்குப் பின்னா் அனுப்பி வைக்கப்பட்டன.