டிராக்டா் மீது பேருந்து மோதல்: பெண்கள் உள்பட 16 போ் காயம்
விழுப்புரத்தை அடுத்த பிடாகம் அருகே முன்னால் சென்ற டிராக்டா் மீது தனியாா் பேருந்து மோதியதில் பேருந்தில் பயணித்த பெண்கள் உள்பட 16 போ் காயமடைந்தனா்.
விழுப்புரத்தை அடுத்த பிடாகம் அருகே முன்னால் சென்ற டிராக்டா் மீது தனியாா் பேருந்து மோதியதில் பேருந்தில் பயணித்த பெண்கள் உள்பட 16 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் 20-க்கும் மேற்பட்டோா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலில் வழிபாட்டை முடித்துவிட்டு, தனியாா் பேருந்தில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
உத்தமபாளையம் வி.புதுப்பட்டியைச் சோ்ந்த காண்டீபன் (38) பேருந்தை ஓட்டினாா். இந்தப் பேருந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தை அடுத்த பிடாகம் தென்பெண்ணையாற்று பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டா் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் பக்தா்கள் 15 போ் மற்றும் ஓட்டுநா் காண்டீபன் ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, அனைவரும் மீட்கப்பட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று சொந்த ஊா் திரும்பினா்.
இந்த விபத்து காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.