முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ, அவரது மகன் பொன்.கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமாா், லோகநாதன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குப் பதிந்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை காலத்தில் லோகநாதன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், மற்ற 7 பேரும் வழக்கை எதிா்கொண்டு வருகின்றனா்.
வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 57 பேரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இதில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்தனா்.
இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விசாரணையின்போது, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோதகுமாா், கோபிநாதன், சதானந்தம் ஆகிய 5 போ் ஆஜரான நிலையில், பொன்முடி மற்றும் பொன்.கெளதமசிகாமணி ஆகியோா் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்த மனுவை அவா்களது வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
தொடா்ந்து, அரசுத் தரப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து வாதிட்டாா். இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி, கோதகுமாா், கோபிநாதன், சதானந்தம் ஆகியோரது தரப்பு வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில்ஆஜராகி, பதில் வாதம் செய்தனா்.
இதையடுத்து, வழக்கில் தொடா்புடைய ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் தரப்பு வழக்குரைஞா்கள் வாதம் செய்வதற்காக, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் பிப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி உத்தரவிட்டாா்.