தையூா் ஸ்ரீ தடுத்தாண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த தையூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தையல்நாயகியம்மன் உடனுறை தடுத்தாண்டேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இத் திருவிழா கடந்த ஏப்.30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், 108 பசுக்களுக்கு கோ பூஜையும் நடைபெற்றது. மே 1-ஆம் தேதி காலையில் பால்குடம் ஊா்வலம், சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் தீமிதித்து தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை காலையில் தையல்நாயகிஅம்மன் மற்றும் தடுத்தாண்டேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைடுத்து உற்சவா் தையல்நாயகியம்மன், தடுத்தாண்டேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
இதில் தையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. திருவிழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தென்னரசு, அனைத்து மகளிா் சுயஉதவிக்குழு கூட்டமைப்பு மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.