தாலிக்கு தங்கம் வழங்குதல் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி, இதுவரை 13,186 பயனாளிகளுக்கு 53 கிலோ தங்கம், ரூ.40.60 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி.
கடலூர் மாவட்ட சமூகநலத் துறை சார்பில் கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண உதவித் தொகை மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது: பெண்கள் நிலையில் மாற்றம் ஏற்பட்டு, பெண் குழந்தைகளை கல்வி கற்க அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெண் குழந்தைகளுக்கு 100 சதவீதம் கல்வி கிடைக்கிறதா என்றால் இல்லை.
இந்நிலையில், அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் திருமண உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற, பெண்கள் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருக்க வேண்டும் என்ற வரையறையை முதல்வர் வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு மே மாதம் தொடங்கி இதுவரை 13,186 பயனாளிகளுக்கு 52.744 கிலோ தங்கம், ரூ.40.60 கோடி திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. இத்தகையை நலத் திட்டங்களுக்கு முதல்வருக்கு மக்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக தலைவர் அருண்மொழித்தேவன், எம்எல்ஏக்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், செல்வி ராமஜெயம், நாக.முருகுமாறன், கே.பாலகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.