முகப்பு
கடலூர்

தொகுதி அலசல்:ஐந்து முனைப் போட்டியில் கடலூர்!

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூர், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலான 1952ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வருகிறது. கடலூர் நகராட்சியை முழுமையாகவும், கடலூர் வட்டத்தின் பெரும்பகுதியையும் உள்ளடக்கியத் தொகுதியாக உள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூர், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலான 1952ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வருகிறது. கடலூர் நகராட்சியை முழுமையாகவும், கடலூர் வட்டத்தின் பெரும்பகுதியையும் உள்ளடக்கியத் தொகுதியாக உள்ளது.

15ஆவது சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் கடலூரில் அதிகபட்சமாக திமுக 7 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் 4 முறையும், அதிமுக 2 முறையும், தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1967ஆம் ஆண்டில் இளம்வழுதி திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே இந்தத் தொகுதியானது திமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவரது மகன் இள.புகழேந்தி 1989, 1996, 2001 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று தற்போது 5ஆவது முறையாக களம் காண்கிறார்.

திமுகவின் கோட்டை என்ற நிலையை மாற்றுவதற்காக முன்னாள் அமைச்சர் தாமோதரனின் சகோதரரான எம்.சி.சம்பத் பண்ருட்டி தொகுதியிலிருந்து கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டு போட்டியிட்டு, கடந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வணிக வரித் துறை அமைச்சராகவும் தேர்வானார். தற்போது மீண்டும் அதிமுக சார்பில் எம்.சி.சம்பத் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் 5ஆவது முறையாக களம் காண்கிறார் கட்சியின் மாநில மாணவரணிச் செயலர் இள.புகழேந்தி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் பழ.தாமரைக்கண்ணன். மக்கள் நலக் கூட்டணி சார்பில் தமாகாவின் ஏ.எஸ்.சந்திரசேகரன். பாஜக சார்பில் பி.துறைமுகம் செல்வம் ஆகியோர் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள். இவர்களைத் தவிர சுயேச்சைகள் உள்பட 14 பேர் களம் காண்கிறார்கள். கடலூர் தொகுதி இத்தேர்தலில் 5 முனைப் போட்டியை சந்திக்கிறது.

இரட்டை இலையே பலம்:

எம்.சி.சம்பத் கடந்த தேர்தலின் போது ரயில்வே சுரங்கப் பாதை திட்டத்தை முடித்து கொடுப்பேன், புதை சாக்கடை திட்டத்தை முடிப்பேன் என்று கூறி அதனை நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். மேலும், புதிய ஆட்சியரகம் அமைத்ததோடு, சுற்றுச் சாலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

வெள்ளத்தின் போது 6 அமைச்சர்கள் குழு பணியாற்றியது மற்றும் தொகுதியில் தான் செய்த சாதனைகள் கை கொடுக்கும் என்பதுடன், மீனவ கிராம மக்களிடம் எம்ஜிஆரின் இரட்டை இலைக்கு இருக்கும் செல்வாக்கு தன்னை காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கை அவரிடம் அதிகமாக உள்ளது.

பலவீனம்: சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாதது, வெள்ள நிவாரணப் பொருள்கள் முழுமையாகச் சென்றடையாதது இவரது பலவீனம். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயலாற்றும் பட்சத்தில் மக்களிடம் இவரது சாதனைகள் எடுபடும்.

பழைய சாதனைகளில் நம்பிக்கை: திமுக வேட்பாளர் இள.புகழேந்தியும் தான் எம்எல்ஏவாக இருந்தபோது கட்டிக்கொடுத்த பாலங்கள், உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்தது ஆகியவை தனக்கு சாதமாக இருக்கும் என்று நம்புகிறார். மேலும், கடலூர் தொகுதியானது திமுகவுக்கு சாதகமான தொகுதி என்பதால், தன்னை கரை சேர்த்து விடும் என்ற நம்பிக்கையும் இவரிடம் உள்ளது.

பலவீனம்: தொடர்ந்து 5ஆவது முறையாகப் போட்டியிடுவதும், புதியவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததும் கட்சியினரிடம் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொகுதியில் அதிகம் இல்லாத நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற குறையும் உள்ளது.

கூட்டணியே பலம்: தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரசேகரனுக்கு கூட்டணியின் பலமே நம்பிக்கையாக உள்ளது. இந்தத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், தேமுதிகவும் அதிக பலம்கொண்ட கட்சிகளாக உள்ளன. இவர்களுடன் கம்யூனிஸ்டுகள், தமாகா, மதிமுகவின் வாக்குகளும் சேரும்பட்சத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அதிசயமும் நிகழலாம்.

இந்தக் கூட்டணிக்கு விழும் வாக்குகள் இதுவரையில் யாருக்கு விழுந்த வாக்குகள் என்பதைப் பொறுத்து ஆண்ட கட்சிகளின் முடிவுகளில் பெரும் மாற்றம் ஏற்படும். புதிய வாக்காளர்களிடமும், நடுத்தர மக்களிடமும் நெருங்கிச் செல்வது இவர்களின் பலமாக உள்ளது.

பலவீனம்: 6 கட்சிகளின் கூட்டணித் தலைவர்களையும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்துச் செல்வதிலேயே கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. காங்கிரஸிலிருந்து பிரிந்தாலும் கோஷ்டி பூசலை விடாமல் எடுத்து வந்தது வேட்பாளருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். சின்னத்தை மக்களிடம் முழுமையாக எடுத்துச் செல்ல முடியாததும் பலவீனமாக பார்க்கப்படுகிறது.

பேச்சே பெரிய பலம்: நாம் தமிழர் கட்சி சீமானால் கடலூர் தொகுதி தமிழக அரசியலில் உற்று நோக்கப்படுகிறது. தனது அதிரடி பேச்சால் இளைஞர்களை கவர்ந்து வருவது இவரது பலம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களோடு இருக்க வேண்டும் என்பதால், கடலூரை தேர்வு செய்ததாக கூறுவது மக்களை இவர் மீது ஈர்க்க வைத்துள்ளது. எனவே, கணிசமான வாக்குகளைப் பெற்று மற்ற வேட்பாளர்களுக்கு போட்டியாக விளங்குவார் என்று நம்பப்படுகிறது.

பலவீனம்: கட்சிக்கு வலுவான கட்டமைப்பு இல்லாததால் சீமான் மீதான ஈர்ப்பினை வாக்காக மாற்றுவதில் சற்று தொய்வு உள்ளது. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வேட்பாளராக உள்ளதால் இங்கு அவர்களால் தீவிர களப்பணியாற்ற முடியாத நிலை உள்ளது. அனுபவம் இல்லாத தொண்டர்கள் என்பதால் தேர்தல் களம் புதியதாக இருக்கிறது. சீமானுக்கான ஆதரவு வாக்குகளாக மாற்றப்பட்டால் மாற்றம் நிகழலாம்.

மாற்றம், முன்னேற்றம்: மாற்றம், முன்னேற்றம் எனும் வார்த்தையோடு களம் காணும் அன்புமணியையும், கட்சியின் முந்தைய பலத்தையும் நம்பி களம் காண்கிறார் பழ.தாமரைக்கண்ணன். கட்சி ஏற்கெனவே வலுவாக உள்ள இந்தத் தொகுதியில், அன்புமணியின் பேச்சும், கட்சியின் தேர்தல் அறிக்கையும் இளைஞர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் வெகுவாக கவரும் என்ற நம்பிக்கை இவர்களிடம் உள்ளது.

பலவீனம்: எனினும் கட்சியின் பலமானது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி பெற்றிருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

மோடியே பலம்: பாஜக வேட்பாளரான பி.துறைமுகம் செல்வம் பிரதமர் மோடியின் சாதனைகளையும், அவருக்கான அலையையும் நம்பியே தேர்தல் களம் காண்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வாக்குகளைப் பெற்றிருந்த பாஜக, தற்போது வேட்பாளரின் ஜாதி ரீதியான வாக்கினையும் எதிர்பாக்கிறது.

பலவீனம்: போட்டியில் உள்ள வேட்பாளரே சுணக்கம் காட்டுவதே கட்சியினருக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை கட்டமைப்பு இல்லாதது பெரிய பலவீனம். எனவே, கடலூர் தொகுதியானது 5 முனைப் போட்டியை சந்திப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

எனினும் அதிமுக, திமுக, தமாகா வேட்பாளர்களிடையேதான் போட்டியின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து யாரால் வாக்கினை சேகரிக்க முடிகிறதோ அவர்களால் மட்டுமே வெற்றி வாகை சூடி கரையேற முடியும்.

- எஸ். முத்துக்குமார்

முழு கட்டுரையைப் படிக்க →