ஜன.6, 7-இல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்
முதல்வர் கோப்பைக்கான கடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 6, 7-ஆம் தேதிகளில் கடலூரில் நடைபெறுகிறது.
முதல்வர் கோப்பைக்கான கடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 6, 7-ஆம் தேதிகளில் கடலூரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2017-18-ஆம் ஆண்டின் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ஜனவரி 6, 7-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில், தடகளம், நீச்சல், இறகுப் பந்து, மேசைப் பந்து, டென்னிஸ், கபடி கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துப் பந்து, வளைகோல் பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டியில் கலந்துகொள்பவர்கள் டிசம்பர் 31-ஆம் தேதியன்று 21 வயது பூர்த்தியடையாதவர்களாக இருத்தல் வேண்டும். மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டியில் முதல் இடம் பெறுபவர்கள் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் சிறந்த வீரர், வீராங்கனையாக தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்படுவோர் மாவட்ட அணியாக, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தனிநபர், குழுப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெறும் அணி வீரர், வீராங்கனைகளுக்கு முறையே ரூ.1,000, ரூ.750, ரூ.500 பரிசுத் தொகையாக வழங்கப்படும். தனிநபர் மற்றும் குழுப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்களது அணியின் பெயர்களை வருகிற 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர், அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதில், ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவை இருபாலருக்கும் நடத்தப்படுகிறது. நீச்சலில் இருபாலருக்கும், 50மீ, 100மீ, 200மீ, 400மீ ப்ரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50 மீ ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர்பிளை ஸ்ட்ரோக், 200மீ தனிநபர் மெட்லி பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
குழுப் போட்டியில், மேசைப்பந்து, டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. தனிநபர் அல்லது குழுப் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் மட்டும் போட்டியாளர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எனவே, மாவட்டத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டிகளில் திரளாகக் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமென ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.