முகப்பு
கடலூர்

பயிர்க் காப்பீடு: அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்

பயிர்க் காப்பீட்டுத் தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக உரிய வழிகாட்டுதலை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:43 PM
பகிர்:

பயிர்க் காப்பீட்டுத் தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக உரிய வழிகாட்டுதலை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
வறட்சி, வெள்ளம், நோய்த் தாக்குதல், பருவநிலை மாற்றம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் பயிர்கள் பாதிக்கப்படும்போது விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற இழப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், தற்போது தொடங்கியுள்ள காரீப் பருவத்தில் நெல், மணிலா, உளுந்து, கரும்பு மற்றும் பிற வகைப் பயிர்கள் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்வாண்டில் மழைப் பொழிவு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிர்களைக் காப்பீடு செய்து, இழப்பு ஏற்படும்பட்சத்தில் அதை ஈடுசெய்து கொள்ளலாம் என வேளாண்மைத் துறை வலியுறுத்தி வருகிறது.
மேலும், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வேளாண் கடன் பெறுபவர்களின் கணக்கிலிருந்து காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதேபோல, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. கடன் பெறாத விவசாயிகளும் காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் 70 சதவீதம் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திருந்த நிலையில், நிகழ்வாண்டில் இந்த சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பயிர்க் காப்பீட்டுக்காகச் செலுத்தப்படும் பணத்துக்கு விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. இழப்பு ஏற்படும்போது தனியார் காப்பீட்டு நிறுவனத்தை அணுகுவதற்கான தொடர்பு எண்களோ, வழிமுறைகளோ வழங்கப்படுவதில்லை. காப்பீட்டுத் திட்டத்தை வலியுறுத்தும் வேளாண்மைத் துறையினரும் இதுகுறித்து உரிய தகவல்களை அளிப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வெலிங்டன் நீர்ப் பாசன சங்கத் தலைவர் பெண்ணாடம் ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், காப்பீட்டுக்காக விவசாயிகளிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான ரசீதோ, காப்பீட்டு பத்திரமோ வழங்கப்படுவதில்லை.
இழப்பு ஏற்பட்டால் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி, அது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னர் குழு அமைத்தே இழப்பு கணக்கீடு செய்யப்படுகிறது. இதில் காப்பீட்டு நிறுவனத்தின் பங்களிப்பு எதுவும் இல்லை.
குறிப்பாக, 2015-16-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதுதான் காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. 2016-17-ஆம் ஆண்டின் வறட்சி பாதிப்புகள் குறித்து தற்போதுதான் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் தொகை செலுத்தும்போது வறட்சி பாதிப்பு, வெள்ளப் பாதிப்புக்கு எவ்வளவு இழப்பீடு, நடவுக்கு முன்பு, பின்பு ஏற்படும் பாதிப்புக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்ற விவரங்களையும் வழங்க மறுக்கின்றனர். குறிப்பாக, இழப்பு ஏற்பட்டால் யாரை அணுகுவது என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில்லை. இதனால், விவசாயிகள் செலுத்தும் பணம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு, விவசாயிகள் அலைக்கழிக்கப்படும் நிலையே உள்ளது என்றார்.
இதுகுறித்து வேளாண்மைத் துறை சார்பில் தெரிவித்ததாவது: விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் காப்பீட்டுத் தொகை ஒவ்வோர் ஆண்டும் மாறுபடும். அதனை மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழுவே முடிவு செய்யும். அதன்படி, நிகழ் காரீப் பருவத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்காக 37,940 விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.45.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இழப்பு ஏற்பட்ட விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் உதவி இயக்குநர்களை அணுகலாம்.
இதற்கு முன்பு மத்திய அரசின் காப்பீட்டுத் திட்ட நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பிரீமியம் பெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஐசிஐசிஐ வங்கியின் காப்பீட்டு பிரிவிடமே பிரீமியம் செலுத்துகிறோம். எனவே, வட்டத்துக்கு ஓர் அலுவலகம் அமைத்து, அதனை விவசாயிகள் தொடர்புகொள்ளும் வகையில் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →