அரசுக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்!
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர்வதில் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர்வதில் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த முறை பிளஸ்-2 பொதுத் தேர்வை 31,333 பேர் எழுதினர். இவர்களில் 26,589 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உயர் கல்வி கற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த காலங்களில் பொறியியல் படிப்புகள் மீதிருந்த மாணவர்களின் ஆர்வம், கடந்த இரு ஆண்டுகளாக கலை அறிவியல் படிப்புகள் மீது திரும்பியுள்ளது. இதனால், அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி, விருத்தாசலத்தில் திரு.கொளஞ்சியப்பர் அரசுக் கல்லூரி, சி.முட்லூரில் சிதம்பரம் அரசுக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தேவனாம்பட்டினம் கல்லூரியில் காலை, மாலை வேளைகளில் இரு சுழற்சி முறையில்
வகுப்புகள் நடத்தப்படுகின்றன. காலை சுழற்சியில் 16 பாடப் பிரிவுகளிலும், மாலை சுழற்சியில் 6 பாடப் பிரிவுகளிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன.
அரசுக் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் மே 12-இல் தொடங்கி, 29-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேவனாம்பட்டினம் கல்லூரியில் 5,989 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதில், 4,964 விண்ணப்பங்கள் நிறைவு செய்து பெறப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் க.மனோகரன் கூறியதாவது: கடந்த ஆண்டில் 4,100 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 2-ஆம் நிலைக் காவலர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற போட்டித் தேர்வுகளில் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெறுகிறார்கள். பொறியியல் படிப்புக்கு கூடுதலாகச் செலவிட்டும், சாதாரண பணியைப் பெறும் நிலையே உள்ளது.
எனவே, போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளையே தேர்வு செய்கின்றனர். இதில், படிப்புக்கான செலவுத் தொகையைவிட, அரசு உதவித் தொகை கூடுதலாக மாணவர்களுக்கு கிடைக்கிறது என்றார்.
விருத்தாசலம் திரு.கொளஞ்சியப்பர் கல்லூரி முதல்வர் வி.இந்துமதி கூறியதாவது: இந்தக் கல்லூரியில் தற்போது 4,200 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விட அதிகமாகும். பி.காம், பி.ஏ., (ஆங்கிலம்) பாடங்களுக்கு அதிகப் போட்டி உள்ளது.
இந்தப் பட்டப் படிப்புகளை முடித்தவுடன் வேலை கிடைப்பதோடு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும் உதவுவதால் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன என்றார். சி.முட்லூர் கல்லூரி முதல்வர் முருகேஸ்வரி கூறியதாவது: கல்லூரியில் சுமார் 3,200 விண்ணப்பங்கள் விற்கப்பட்டதில், 2,600 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. அரசின் போட்டித் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்தும் விதத்தில் கலை, அறிவியல் படிப்புகளையே மாணவர்கள் அதிகமானோர் தேர்வு செய்யும் மனப்பாங்கைக் காண முடிகிறது என்றார்.
மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்டக் கலந்தாய்வு, ஜூன் 5-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை பாடவாரியாக நடைபெறும். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு ஜூன் 21, 22-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் மட்டும் 3-ஆம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.