முகப்பு
கடலூர்

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அப்பர் ஏழை மாணவர்கள் இல்லத்தின் சார்பில், குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அப்பர் ஏழை மாணவர்கள் இல்லத்தின் சார்பில், குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 பள்ளியின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், நன்னடத்தை அலுவலர் பிரபு, மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பால, இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் சுகுணா, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் துர்கா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
 நிகழ்வில் அப்பர் இல்ல குழந்தைகள் சார்பில் ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இல்ல நிர்வாகத்தோடு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ்குமார் செய்திருந்தார்.
 நிர்வாகக் குழுக் கூட்டம்: தொடர்ந்து, அப்பர் ஏழை மாணவர்கள் இல்ல நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
 இதேபோல, பண்ருட்டி ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக். பள்ளி நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு பள்ளித் தாளாளர் எம்.நடராஜன் தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 அதேபோல, நெய்வேலியை அடுத்த வடக்கு மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் மக்கள் மன்றத்தின் சார்பில், குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 அப்துல் கலாம் மக்கள் மன்றத்தின் பொறுப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியை தனலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வடக்குத்து ஊராட்சி முன்னாள் தலைவர் கோ.ஜெகன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வி.எம்.எஸ்.வைத்திலிங்கம், திருமலைவாசன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நெய்வேலி பவர் சிட்டி அரிமா சங்கம் சார்பில், மந்தாரக்குப்பம் ஜவஹர் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அந்தச் சங்கத் தலைவர் அன்வர்தீன் தலைமை வகித்தார்.
 பள்ளி முதல்வர் மருதாத்தால் வரவேற்றார். அரிமா சங்கத்தின் மாவட்டத் தலைவர் லட்சுமி நாராயணன், துணை முதல்வர் அனுசியா முன்னிலை வகித்தனர். அரிமா சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ராஜமாரியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
 விருத்தாசலத்தில்...
 விருத்தாசலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
 விருத்தாசலம் கோபாலபுரத்தில் உள்ள ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளித் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமை வகித்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
 விழாவில் பள்ளியின் முதல்வர் ஏ.முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 அதேபோல, ஜெயப்பிரியா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியிலும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
 முதுநிலை முதல்வர் சங்கரய்யா, பள்ளி முதல்வர் ஈஸ்வரி மகேஷ், நிர்வாக அலுவலர் சேதுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஹோப் நிறுவனம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் கல்வி குறித்து ஹோப் இயக்குநர் ஜோசப் விக்டர் ராஜ் பயிற்சி அளித்தார். மேலும், சென்ற ஆண்டு அரசுப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து, நிகழாண்டு மேற்படிப்பு படிக்கும் 11 மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
 நிர்வாகி மேரி விக்டோரியா, ஒருங்கிணைப்பாளர்கள் நீட் ஜோதி, சபீதா, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 அதேபோல, உலகத் திருக்குறள் பேரவை சார்பில் திருப்பாதிரிபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியை ராஜசுந்தரி வரவேற்றார்.
 ஆசிரியை இந்திரா நன்றிகூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →