கடலூர்

தவறான தகவலளித்த 10 பேருக்கு உதவித் தொகை நிறுத்தம்: மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை

தினமணி

தவறான தகவலளித்து மாதாந்திர உதவித் தொகை பெற்று வந்த 10 பேருக்கான உதவித் தொகையை நிறுத்துவதற்கான ஆணையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
 பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித் தொகை வழங்கி வருகிறது. இதில், ஆதரவற்ற முதியோர், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
 அதன்படி மாவட்டத்தில் 1.11 லட்சம் பேர் உதவித் தொகை பெற்று வருகின்றனர்.
 எனினும், இதில் சிலர் போலியான ஆவணங்கள் அளித்தும், சிலர் உண்மையை மறைத்தும் உதவித் தொகை பெற்று வருவதாக புகார்கள் வந்தன. அதனடிப்படையில், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா அண்மையில் கடலூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். இதற்காக திருப்பாதிரிபுலியூர், தானம் நகர், மார்க்கெட் காலனி, சூரப்பன்நாயக்கன் சாவடி, சுப்பராயலு நகர், தங்கராஜ் நகர் ஆகிய பகுதிகளைத் தேர்வு செய்து அங்கு உதவித் தொகை பெற்று வரும் 200 பேரது வீடுகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் எஸ்.சிவாவுடன் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்வில், 10 பேர் உண்மையான தகவல்களை மறைத்து மாதாந்திர உதவித் தொகை பெற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களது உதவித் தொகையை நிறுத்தம் செய்வதற்கான உத்தரவை அவர் வழங்கினார்.
 மேலும், ஆய்வின் போது மாதாந்திர உதவித் தொகை முழுமையாக ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறதா என்பதையும் பயனாளிகளிடம் அவர் கேட்டறிந்தார். முழுமையான தொகை கிடைக்காதபட்சத்தில் வட்டாட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளிக்கலாம் என்றும் பயனாளிகளிடம் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT