கடலூர்

ஆமை முட்டைகளை சேகரிக்க இரவில் பயணிக்கும் ஆர்வலர்கள்!

 நமது நிருபர்

ஆமை முட்டைகளைத் தேடி, கடலூரில் இயற்கை ஆர்வலர்கள் இரவுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
 கடல்வாழ் உயிரினங்களில் சிறப்புப் பெற்ற ஆமை இனத்தில் முக்கியமானது ஆலிவ்ரிட்லி வகை ஆமைகள். ஆழ்கடலில் வசிக்கும் இந்த வகை ஆமைகள் நீண்ட தொலைவு பயணித்து வங்கக் கடலோரப் பகுதியில் முட்டையிடும் வழக்கம் கொண்டவை.
 ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஆமைகளின் இனப் பெருக்கக் காலமாகும். அதன்படி, தற்போது கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஆலிவ்ரிட்லி ஆமைகள் அதிகளவில் முட்டையிட்டு வருகின்றன. இந்த முட்டைகள் மீனவர்களாலும், இயற்கை ஆர்வலர்களாலும் சேகரிக்கப்பட்டு, வனத் துறை மூலமாக ராசாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள முட்டைகள் பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
 ஆமை முட்டைகளைச் சேகரிப்பது சுவையான அனுபவம். நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மட்டுமே ஆமைகள் முட்டையிடும். முன்னதாக, கடலில் இருந்துகொண்டே கடற்கரைப் பகுதியை கவனிக்கும் ஆமைகள் உரிய நேரம் வந்ததும் கடற்கரையை அடையும். பின்னர், கடற்கரை மணலில் சுமார் 2 அடி ஆழம் வரை குழி பறித்து அதில் 100 முதல் 120 வரையிலான முட்டைகளை இட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும்.
 இவ்வாறு இடப்படும் முட்டைகளை நரி, நாய் போன்றவை தின்றுவிடும் என்பதால், இதை பாதுகாப்பான இடத்தில் வைக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இயற்கை ஆர்வலர் தி.அருள்செல்வம், வனத் துறையால் முட்டைகளை சேகரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆர்வலர் மழலைச்செல்வன், மீனவர்கள் கோவிந்த், பிரகாஷ், பிரபு, வேலாயுதம், ஹரி ஆகியோர் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடலூர் அருகே உள்ள தாழங்குடா பகுதியில் ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியைத் தொடங்கினர்.
 சுமார் 5 கி.மீ. தொலைவு வரை நடந்து சென்று முட்டை இருக்கும் பகுதிகளை உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அடைந்தனர். அங்கு, ஆமைகள் தோண்டிய 2 குழிகள் கண்டறியப்பட்டன. அதில் ஒரு குழியில் 130 முட்டைகளும், மற்றொரு குழியில் 106 முட்டைகளும் கண்டெடுக்கப்பட்டு அவை பொரிப்பகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.
 இதேபோல, பல்வேறு மீனவர்களின் துணையுடன் இதுவரை சுமார் 4 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
 கடந்த ஆண்டு 50 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதை விட நிகழ் ஆண்டு கூடுதலாக சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் மழலைச்செல்வன் கூறினார்.
 இதுகுறித்து இயற்கை ஆர்வலர் தி.அருள்செல்வன் கூறியதாவது:
 ஆலிவ்ரிட்லி வகை ஆமைகள் அதிகபட்சம் 50 கிலோ வரை வளரும். கடல்வாழ் சூழலுக்கு முக்கியமான இந்த வகை ஆமைகள் முட்டையிடுவதற்காக கடற்கரையோரம் வந்துச் செல்லும்போது சில உயிரிழக்கவும் நேரிடுகிறது. எனவே, அதன் முட்டைகளைக் காப்பாற்றி குஞ்சுகளாக பொரிக்க வைத்து மீண்டும் கடலுக்குள் விடும் பணியை வனத் துறை மேற்கொண்டு வருகிறது.
 பொரிக்கப்படும் 100 குஞ்சுகளில் ஒரு குஞ்சு மட்டுமே முழுமையான வளர்ச்சியைப் பெறுகிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மீனவர்களிடமும், பொதுமக்களிடமும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆமைகள் இறப்பைத் தடுக்க வேண்டும்.
 இதன் மூலமாகவே கடலியல் சூழலை சமநிலையில் பாதுகாக்க முடியும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT