முகப்பு
கடலூர்

மணல் கடத்தலைத் தடுத்த வி.ஏ.ஓ.வை கொல்ல முயற்சி 

பண்ருட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர், 2 உதவியாளர்களை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

பண்ருட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர், 2 உதவியாளர்களை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
பண்ருட்டி ஒன்றியம், மாளிகம்பட்டு கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக குமாரசாமி என்பவரும், உதவியாளர்களாக ராமலிங்கம், கிருஷ்ணகுமார் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணியளவில், தாழம்பட்டு கெடிலம் ஆற்றில் மணல் திருடப்படுவதாக விஏஓ குமாரசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தனது உதவியாளர்களுடன் தாழம்பட்டு கெடிலம் ஆற்றுக்குச் சென்றார். அங்கு லாரியில் மணல் ஏற்றப்பட்டதை தடுத்துள்ளார். 
அப்போது, லாரி ஓட்டுநர் தாழம்பட்டைச் சேர்ந்த கோவர்த்தனன் (22), பண்ருட்டியைச் சேர்ந்த மோகன் என்ற ஸ்டிக்கர் மோகன், எஸ்.ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் ஆகியோர், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனராம். அப்போது, மோகனும், அரிகிருஷ்ணனும் தாங்கள் கொண்டு வந்திருந்த கார்களை இயக்கி, கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமி, அவரது உதவியாளர்கள் மீது ஏற்றி கொலை செய்ய முயன்றனராம். 
இதுகுறித்து, விஏஓ குமாரசாமி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் லாரி ஓட்டுநர் கோவர்த்தனன், ஸ்டிக்கர் மோகன், அரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், லாரி, 2 கார்களையும் பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →