என்எல்சி சுரங்க நீர் கிடைக்காததால் செங்கால் ஓடை கடைமடை பகுதியில் கருகும் நெல் பயிர்கள்
குறிஞ்சிப்பாடி செங்கால் ஓடை கடைமடை பகுதிகளுக்கு என்எல்சி சுரங்க நீர் வரத்து தடைபட்டதால், சுமார் 500 ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
குறிஞ்சிப்பாடி செங்கால் ஓடை கடைமடை பகுதிகளுக்கு என்எல்சி சுரங்க நீர் வரத்து தடைபட்டதால், சுமார் 500 ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், என்எல்சி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை பாசனத்துக்காக நம்பியுள்ளன. நிகழ் குறுவை சாகுபடியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில், கதிர் வரும் தருவாயில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை உருவானது. இதுகுறித்து "தினமணி'யில் செய்தி வெளியானது.
அதன்பேரில், வேளாண் துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பினர். இதுகுறித்து அன்றைய தினமே ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி, கொளக்குடி ஏரியில் திருப்பிவிடப்பட்ட என்எல்சி 2-ஆவது சுரங்க நீரை, மேல்பரவனாற்றில் திருப்பிவிட உத்தரவிட்டார். ஆனால், மேல்பரவனாற்றில் சென்ற தண்ணீரை குறிஞ்சிக்கொல்லை, மதுவாணமேடு விவசாயிகள் மறித்து தங்களது பகுதிக்கு திருப்பிவிட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து குறிஞ்சிக்கொல்லை, மதுவாணமேடுக்கு சென்ற தண்ணீரை வாலாஜா ஏரிக்கு திருப்பி விட்டனர். இதனால், 4 நாள்களில் வாலாஜா ஏரி நிரம்பி, பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், மேல்பரவனாற்றில் சம்பு அதிகளவு வளர்ந்துள்ள காரணத்தால் தண்ணீரின் வேகம் குறைந்துள்ளது. தண்ணீரானது மருவாய், ஜெயங்கொண்டான், பின்னலூர் வாய்க்கால்கள் வழியாக வந்து வயல் வெளியை அடைய குறைந்தது 3 நாள்களாகும். தற்போது, செங்கால் ஓடை கடைமடை பகுதியான கல்குணம் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் இல்லாததால், சுமார் 500 ஏக்கரில் நெல் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும், வாலாஜா ஏரியில் 5 கண் மதகுகள் வழியாக தண்ணீர் குறைந்தளவே வெளியேறுகிறது. இந்த இடம் மேடான பகுதி என்பதால் வாலாஜா ஏரி முழுமையாக நிரம்பினால் மட்டுமே, பரவனாற்றில் தண்ணீர் செல்லும். தற்போது குறைவாக வருகிற தண்ணீரையும் 70 கனஅடி அளவுக்கு சென்னை மக்களின் குடிநீருக்காக அனுப்பி வருகின்றனர். இதன் காரணமாக, கல்குணத்தின் ஒரு பகுதியான ஓணான்குப்பம், பூதம்பாடி பகுதிகளுக்கு தண்ணீர் முற்றிலும் நின்றுவிட்டது.
என்எல்சி சுரங்கம் 1 ஏ-இல் இருந்து வரும் தண்ணீர் செங்கால் ஓடை வழியாக வந்து மேற்படி கிராமங்களில் பாய்கிறது. இந்த தண்ணீரை, சேராக்குப்பம், ஆண்டிக்குப்பம், ஆபத்தானபுரம், எல்லப்பன்பேட்டை, சந்தைவெளிப்பேட்டை விவசாயிகள் ஆயில் என்ஜின் மற்றும் மின் மோட்டார் மூலம் எடுப்பதால் செங்கால் ஓடைக்கு தண்ணீர் வரத்து நின்று விட்டது. இதன் காரணமாக குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ராஜாகுப்பம், ஒணான்குப்பம், கல்குணம் வடக்கு பகுதி, பூதம்பாடி பகுதி கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: என்எல்சி நிர்வாகம் உடனடியாக கூடுதல் தண்ணீரை திறந்து விட்டால் தான் இந்தப் பகுதியில் 2,000 ஏக்கர் நெல் பயிர்களைக் காப்பாற்ற முடியும். மழைக் காலத்தில் அதிகளவு தண்ணீரை திறந்து விடும் என்எல்சி நிர்வாகம் தற்போது, தண்ணீர் அளிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. மாவட்ட நிர்வாகம் நீர்பிடிப்பு பகுதிகளை தூர்வாரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் என்எல்சி நிர்வாகத்துடன் பேசி, சுரங்கம் 1ஏ-இல் இருந்து அதிக அளவு தண்ணீரை பெற்றுத் தந்தால்தான் எஞ்சிய பயிர்களையேனும் காப்பாற்ற முடியும் என்றார்.