முகப்பு
கடலூர்

தமிழக அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும்'

காவிரி விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்

Updated On : 15 மே, 2018 at 4:34 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

காவிரி விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு தவணைகளை உச்ச நீதிமன்றத்தில் பெற்று, திங்கள்கிழமை வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. பிப்.16-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்திருக்க வேண்டிய நிலையில், மத்திய அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் மத்திய அமைச்சரவை இந்தப் பிரச்னை தொடர்பாக ஆலோசிக்க முடியவில்லை எனவும், பிரதமரின் ஒப்புதலையும் பெறவில்லை என்றும் கூறியது. தற்போது கர்நாடகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், திட்ட அறிக்கையானது பிரதமர், அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு ஏமாற்றியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு வரைவுத் திட்ட நகலை வழங்க வேண்டும். அந்த வரைவுத் திட்ட நகல்களை தமிழக அரசு அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கி, அவற்றின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதன்படி வரைவுத் திட்ட அறிக்கையை ஏற்பதா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
இந்த வரைவுத் திட்ட அறிக்கையானது, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து அம்சங்களும் நிறைந்த, அதிகாரம் பொருந்திய வாரியத்தை அமைப்பதாக இருக்க வேண்டும். கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்நிலைகள், அணைகளை நிர்வகிக்கும் திறன் பெற்றதாகவும் அமைய வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது சிரமம்தான்.
வரும் 16-ஆம் தேதிக்குப் பிறகு நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இறுதி நாளில் தாக்கல் செய்வதால் இந்த வழக்கை இழுத்தடிக்கும் அநீதியை மத்திய அரசு செய்கிறது என்றே தோன்றுகிறது என்றார் கே.பாலகிருஷ்ணன்.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கற்பனைச்செல்வம், வாஞ்சிநாதன், பாரதிமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.