கடலூர்

தடை செய்யப்பட்ட வலைகளைப் பறிமுதல் செய்ய தயக்கம் காட்டிய மீன்வளத் துறையினர்!

DIN

அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை கடலூரில் மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்வதில் மீன்வளத் துறையினர், கடலோரக் காவல் படையினர் தயக்கம் காட்டியது வியப்பை ஏற்படுத்தியது. 
மீனவர்கள் சுருக்குமடி, இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்திட தமிழக அரசு கடந்த 2000-ஆம் ஆண்டு தடை விதித்தது. எனினும், இந்த வகை வலைகள் கடலூர் மாவட்டத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மீனவர்களால் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அண்மையில் நிகழ்ந்த மோதலில் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் மீதான தடை கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பல்வேறு மீனவ கிராமத்தினர் தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டுக்கு எதிராக போராட்டமும் நடத்தி வந்தனர். 
இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த சில நாள்களாக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால், மீன்பிடி வலைகளை துறைமுகம் மற்றும் மீன்பிடி தளங்களில் இறக்கி வைத்தனர். இந்த வலைகளில், அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை கண்டறிந்த மீன்வளத் துறையினர், அந்த வலைகளை 10-ஆம் தேதிக்குள் மீனவர்கள் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் வலைகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் நோட்டீஸ் ஒட்டினர்.
இந்த நிலையில், மீன்வளத் துறையினர், தமிழக கடலோரக் காவல் படையினர் இணைந்து கடலூர் துறைமுகம் மீன்பிடி தளத்தில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மீன்வளத் துறையால் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்களை மீனவர்கள் அகற்றினர். மேலும், துறை ஆய்வாளர்கள் முன்பாகவே தடை செய்யப்பட்ட வலைகளை மீனவர்கள் தங்களது படகுகள், லாரிகளில் ஏற்றிக் கொண்டு வேறுஇடத்துக்கு சென்றனர். தடை செய்யப்பட்ட வலைகள் பறிமுதல் செய்யப்படும் என நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தும் அந்த வலைகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்ய தயக்கம் காட்டியது வியப்பை ஏற்படுத்தியது. 
இதுகுறித்து மீனவ அமைப்பினர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களில் சில கிராமத்தினர் மட்டுமே சுமார் 300 படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்துகின்றனர். இதனால், மற்ற மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT