கடலூர்

மாற்று வசிப்பிடம் கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் தர்னா

தினமணி

தாண்டவன்குப்பம் கிராமத்தினர் மாற்று வசிப்பிடம் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
 நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருவோரில் சுமார் 1,500 குடும்பத்தினர் அருகிலுள்ள தாண்டவன்குப்பம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
 இந்த நிலையில் சுரங்கம் விரிவாக்கத்துக்காக, இந்தப் பகுதியில் வசித்து வருவோரை காலி செய்ய வேண்டுமென என்எல்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறதாம். இதனால் மாற்று இடம் வழங்கக் கோரி தாண்டவன்குப்பம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.
 அப்போது, திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலக வாயில் முன் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். ஆட்சியரக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்துச் சென்றனர்.
 பின்னர், கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தாண்டவன்குப்பம், ஒர்க்ஷாப்கேட், அண்ணா ஸ்டாப் போன்ற பகுதிகளில் வசிக்கும் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மின்சார வசதி செய்துதரப்படவில்லை. இதனால், மின்சாரம் இல்லாமலேயே வாழ்ந்து வருகிறோம். தெருவிளக்கு வெளிச்சத்தில்தான் எங்களது குழந்தைகள் படித்து வந்தனர். தற்போது தெருவிளக்குகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரமும் நிறுத்தப்பட்டதால் எங்கள் பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது.
 இந்தப் பகுதியில் வசித்து வரும் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களையும், மறைமுகத் தொழிலாளர்களையும், பணிஓய்வு பெற்ற தொழிலாளர்களையும் காலி செய்யுமாறு நிர்வாகம் அச்சுறுத்தி வருகிறது.
 எனவே, எங்களது வாழ்வாதாரத்துக்கு நிரந்தரமான மாற்றுக் குடியிருப்பை உருவாக்கித் தர வேண்டும். இல்லையெனில், வரும் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று அந்த மனுவில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT