கடலூர்

சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன் எம்.பி.

DIN


சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே குறவன்குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சமூக வலைதளங்களில் பரவிய அவதூறுகளால் தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்து, அவரைத் திருமணம் செய்துகொள்ள இருந்த அவரது உறவினரான இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவு செய்யாமல், இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பதிவதால் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகளை வரையறுத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
அரபு நாடுகளில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கு, பள்ளி 
மாணவர்களைக் குறிவைத்து ஆபாச வலைதளங்கள் இயங்குகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் அரசியல் ஆதாயம் தேட இடமளிக்கக் கூடாது.
நீட் தேர்வால் தமிழகத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகம் மட்டுமல்ல; தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும். நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து போராடுவோம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை 596 கி.மீ. தொலைவு நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்பர். இந்த பிரச்னையை கட்சி, சாதி, மதம் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அமைத்துள்ள அமைச்சரவை வரவேற்கத்தக்கது. பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 5 பேரை துணை முதல்வர்களாக அறிவித்தும், தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கியிருப்பதை வரவேற்கிறோம். அதேபோல, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆபத்தானது. கல்விக் கொள்கை என்ற வடிவில் காவி கொள்கையைத் திணிக்கப் பார்க்கின்றனர். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பணிக் காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ தலைவரை ஓய்வு பெறும் நாளில் பணியிடைநீக்கம் செய்தது பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
கூடங்குளத்தில் அணுக் கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனவே, மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றார் அவர்.
பேட்டியின் போது, கட்சியின் மாவட்டச் செயலர் பால.அறவாழி, மாநில நிர்வாகி தாமரைச்செல்வன், செய்தித் தொடர்பாளர் திருவரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT