சிதம்பரம்: தொல்.திருமாவளவன் மனு தாக்கல்
சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்
கடலூர்/சிதம்பரம்: சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
அவர் தனது வேட்பு மனுவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.விஜயலட்சுமியிடம் தாக்கல் செய்தார். அவருடன் அரியலூர் மாவட்ட திமுக செயலர் எஸ்.எஸ்.சிவசங்கர், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலர் கு.சின்னப்பா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் கூறியதாவது:
தேர்தலில் நான் வெற்றி பெற்றால் திமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதோ அதை மக்களுக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்வேன். சிதம்பரம் தொகுதிக்கு உள்பட்ட புவனகிரியில் மலர்களைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையும், ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையமும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். அரியலூரில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலப் பணிகளை விரைந்து முடித்து உடனடியாக மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றார் அவர்.
சொத்து விவரம்: தொல்.
திருமாவளவன் தனக்கு அசையும் சொத்துகள் ரூ.58 லட்சத்து 71ஆயிரத்து 292 மதிப்பிலும், அசையா சொத்துகள் ரூ.18 லட்சத்து 27 ஆயிரத்து 800 மதிப்பிலும் என மொத்தம் ரூ.76 லட்சத்து 99 ஆயிரத்து 92 மதிப்பில் சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதில் அசையா சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.25 லட்சத்து 77 ஆயிரத்து 800 என்றும் குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு மொத்தம் ரூ.76 லட்சத்து 50 ஆயிரத்து 241 மதிப்பில் அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு ரூ.48 ஆயிரத்து 851 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் மனு தாக்கல்: இதேபோல, கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெ.அன்புச்செல்வனிடம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். அப்போது, திமுக மாவட்ட செயலர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், விசிக மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஸ்ரீரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மக்களவைத் தொகுதியைப் பற்றி நான் நன்கறிவேன். மத்தியில் காங்கிரஸ் அரசும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசும் விரைவில் அமையும். அப்போது கடலூர் தொகுதிக்குத் தேவையான முன்னேற்றத் திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படும். குறிப்பாக, நெய்வேலி பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றார் அவர்.