கடலூர்

வாக்கு எண்ணும் பணிக்கு 204 பேர் நியமனம்: மாவட்ட ஆட்சியர்

DIN

கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் வாக்கு எண்ணும் பணிக்கு 204 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
 கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.18-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தொகுதிக்கு உள்பட்ட கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலை கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. வாக்கு எண்ணும் பணிக்காக 102 தேர்தல் மேற்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள் என மொத்தம் 204 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்காகவே இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளன்று பணியாளர்கள் தங்களது பணியை மிகுந்த கவனத்துடன், அவசரமின்றியும், நிதானமாகவும் மேற்கொள்ள வேண்டும். இதற்காக இந்தப் பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
 கூட்டத்தில், வாக்கு எண்ணும் முறை குறித்து தேர்தல் பணியாளர்களுக்கு மின்னணு திரை மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கடலூர் சார்-ஆட்சியர் சரயூ, விருத்தாசலம் சார்-ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தோஷினி சந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT