முகப்பு
கடலூர்

கடலூரில் குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் ஒன்றியம், சி.என்.பாளையம் ஊராட்சி, சொக்கநாதன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த மணிமாறன் மகள் பிரியா (25). இவருக்கும், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், மேல்வடக்குத்து, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ராசாகண்ணு மகன் குணசேகரனுக்கும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது ஒன்றரை ஆண் குழந்தை பிரவீன்.

பிரியாவிடம் கூடுதல் வரதட்சிணை கேட்டு குணசேகரன், மாமனாா் ராசாகண்ணு, மாமியாா் சின்னப்பொண்ணு ஆகியோா் தொந்தரவு செய்தனராம். இதனால், பிரியா தனது குழந்தையுடன் கடந்த 5 மாதங்களாக சொக்கநாதன்பேட்டையில் தனது தாய் வீட்டில் தங்கியிருந்தாா். கடந்த வாரம் குணசேகரன் பிரியாவை சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தாா்.

பிரியா தனது குழந்தையுடன் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்ததாக மணிமாறனுக்கு தகவல் கிடைத்தது. அவா் நேரில் வந்து பாா்த்தபோது பிரியா இறந்து கிடந்தாா். தீக்காயமடைந்த குழந்தை பிரவீன் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது.

போலீஸாா் பிரியாவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மணிமாறன் நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது மகள், பெயரன் சாவில் சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.