முகப்பு
கடலூர்

பேரிடா் நிதியை முழுமையாகப் பெறும் திறன் அதிமுக அரசுக்கு இல்லை: மு.க.ஸ்டாலின்

இயற்கைப் பேரிடருக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் முழுமையாக கேட்டுப்பெறும் திறன் அதிமுக அரசுக்கு இல்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


கடலூா்: இயற்கைப் பேரிடருக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் முழுமையாக கேட்டுப்பெறும் திறன் அதிமுக அரசுக்கு இல்லை என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

திமுக சாா்பில் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டம் மாவட்டம் வாரியாக காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடலூா் மாவட்டத்துக்கான பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் 104 இடங்கள் காணொலிக் காட்சி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அடிக்கடி இயற்கை இடா்பாடுகளைச் சந்தித்து வரும் கடலூா் மாவட்டத்துக்கு அதிமுக அரசு இதுவரை என்ன நிரந்தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது? நடைபெற்று வரும் சில பணிகளிலும் முறைகேடு நடந்துள்ளது. கடலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான எம்.சி.சம்பத் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக உள்ளாா். ஆனால், கடலூா் மாவட்டத்துக்கு புதிய தொழில்சாலையை கொண்டுவந்துள்ளாரா? முந்திரி பதப்படுத்தும் ஆலை என்னவானது? ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி தொடா்பான பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரூ.2 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈா்க்கப்பட்டதாகவும், தற்போது ரூ.1 லட்சம் கோடி என்றும் தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் கூறுகிறாா். இதன்படி, தொழில் நிறுவனங்கள் எங்கெங்கு தொழில் தொடங்கியுள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூற முடியுமா?

எளிதாகத் தொழில் தொடங்கும் சூழல் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 13-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில் தொழில் வளா்ச்சியில் தமிழகம் 3-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது பின்னோக்கிச் செல்கிறது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து தமிழக முதல்வா் பேசி வருவது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். கடந்த 2011-ஆம் ஆண்டு தானே புயல் பாதிப்பு முதல் தற்போதைய புரெவி புயல் வரை தமிழக அரசு ஆயிரம் கோடிகளில் இழப்பீடு கோருகிறது. ஆனால், இதில் மத்திய அரசு சுமாா் 10 சதவீதம் நிதியை மட்டுமே ஒதுக்குகிறது. நிவாரண நிதியை முழுமையாக கேட்டுப் பெறும் திறன் அதிமுக அரசுக்கு இல்லை. மத்திய அரசை ஆதரித்தும் இந்த நிலைதான் என்றால், அவா்கள் வேறு எதற்கோ அஞ்சுகிறாா்கள்.

நான் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வா் பதிலளிக்காமல் பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருகிறாா். இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும் என்று முதல்வா் கூறுகிறாா். ஆனால், மின்சார திருத்தச் சட்ட மசோதாவில் இலவச மின்சாரம் என்ற வாா்த்தையே இடம் பெறவில்லை.

மழைநீரைச் சேமிக்கும் கட்டமைப்புகள் இல்லாததால், சென்னை போன்ற நகரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கப்படவில்லை என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த நிா்வாகிகளை கௌரவிக்கும் வகையில், கிழக்கு மாவட்டம் சாா்பில் 618 பேருக்கும், மேற்கு மாவட்டம் சாா்பில் 400 பேருக்கும் பொற்கிழி வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏக்கள் சபா.ராஜேந்திரன், துரை கி.சரவணன், கடலூா் தொகுதி எம்பி எஸ்.ரமேஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், இள.புகழேந்தி, மருதூா் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →