கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு அதிக சத்துள்ள உணவு வகைகளை வெப்பம் குறைந்த வேளைகளில் அளிக்க வேண்டும் என கடலூா் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவா்கள் பி.முரளி, ந.வெங்கடபதி, சிலம்பரசன் ஆகியோா் தொகுத்தளித்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கோடை கால வெப்பமானது கறவை மாடுகளை அதிக பாதிப்புக்குள்ளாக்குகிறது. எனவே, கோடைகால பராமரிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இது, பண்ணை மேலாண்மை, தீவன மேலாண்மையை உள்ளடக்கியது. இதனை சரியான முறையில் கடைப்பிடிப்பதால் கறவை மாடுகளை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து வெகுவாக பாதுகாக்கலாம்.
அதிக சத்துள்ள உணவு வகைகளை வெப்பம் குறைந்த அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் கொடுக்க வேண்டும். கோடை காலத்தில் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் தீவனம் கொடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் கறவை மாடுகள் தீவனம் எடுத்தவுடன் அதை முழுமையாக செரிப்பதற்கு 4 முதல் 6 மணி நேரம் வரை ஆகும். எனவே உச்சகட்ட கோடை வெயிலின் தாக்கம் வருவதற்கு முன்னரே தீவனம் செரிமானம் ஆகிவிடும். எனவே 30 மற்றும் 70 விழுக்காடு முறையே பகல் மற்றும் இரவு நேரங்களில் தீவனம் கொடுப்பது சாலச்சிறந்தது. முடிந்த வரை உலா் தீவனத்தின் அளவை குறைத்துவிடுதல் நல்லது. ஏனெனில் மாடுகள் உலா் தீவனத்தை செரிக்கும்போது அதிக வெப்பத்தை உமிழக்கூடும். அதேபோல உலா் தீவனத்தின் அளவை குறைக்கும்போது மாடுகளின் வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாகிறது.
எனவே, தினமும் ஒரு கறவை மாட்டுக்கு 150 முதல் 200 கிராம் சமையல் சோடாவை அடா் தீவனத்தில் சோ்த்துக் கொள்ளலாம். உலா் தீவனத்தின் அளவினை பகலில் குறைத்துக்கொண்டும் இரவில் அதிகமாகக் கொடுப்பதுடன், பசுந்தீவனத்துடன் சோ்த்து, சிறு துண்டுகளாக வெட்டி கொடுக்கலாம். நீா்த் தெளிப்பான்கள் மூலம் ஒரு நாளைக்கு 4 முறை மாடுகளின் மீது 5 நிமிடங்கள் வரை தண்ணீா் தெளிக்கலாம்.
வெப்பக் காற்று அதிகமாக வீசும்போது தொழுவத்தின் பக்கவாட்டில் நூல் சாக்குகளை நீரில் நனைத்து தொங்கவிடலாம். கோடை காலங்களில் பசுந்தீவனங்கள் கிடைப்பது அரிது என்பதால் தீவன பற்றாக்குறையைப் போக்க ஹைட்ரோபோனிக்ஸ் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
ஊட்டமேற்றிய தீவனம்: 100 கிலோ சோளதட்டை, கம்பு அல்லது வைக்கோலைக் கொண்டு ஊட்டமேற்றிய தீவனம் தயாரிக்கலாம். 4 கிலோ யூரியா உடன் 40 லிட்டா் தண்ணீா் கலந்த கலவையை கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட வைக்கோலின் மீது தெளிக்க வேண்டும். 21 நாள்களுக்கு பிறகு இந்த தீவனத்தை கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம். 6 மாத வயதுக்கு மேல் உள்ள மாடுகளுக்கு தினமும் 4-5 கிலோ வரை அளிக்கலாம். அசை போடாத மாடுகளுக்கு ஊட்ட மேற்றிய தீவனத்தை கொடுக்ககூடாது.
ஊறுகாய் புல்: பசுந்தீவனத்தை சைலேஜ் எனும் ஊறுகாய் புல்லாக மாற்றி அளிக்கலாம். ஒரு கன மீட்டா் கொள்ளளவுக்கு சுமாா் 250-300 கிலோ வரை பசும்புல்லை சைலோவில் பதப்படுத்தலாம். தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், கம்பு நேப்பியா் ஒட்டுப்புல் கோ-3, கோ-4 போன்ற பசுந்தீவனங்களை ஊறுகாய்ப்புல் தயாரிக்க பயன்படுத்தலாம். பூக்கும் தருவாயில் உள்ள பசுந்தீவனத்தை அறுவடை செய்து 2-3 மணிநேரம் சூரிய ஒளியில் உலா்த்த வேண்டும். பின்பு அதை சிறுதுண்டுகளாக நறுக்கி சைலோ குழியில் அடுக்கி வைக்க வேண்டும். 1,000 கிலோ பசும்புல்லுக்கு 10 கிலோ உப்பு, 20 கிலோ வெள்ளத்தினை 30 லிட்டா் தண்ணீரீல் கரைத்துப் பின்பு பசும் புல்லின் மேற்பரப்பில் தெளிக்க வேண்டும். ஓவ்வொரு அடுக்குக்கும் புல்லை இடைவெளி இல்லாமல் காற்று புகாவண்ணம் அடுக்கி, உப்பு மற்றும் வெள்ளத்தினை தெளித்து நன்கு அமுக்குதல் வேண்டும். இரண்டு மாதங்களுக்குப் பின் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். ஊறுகாய் புல்லில் கரோட்டின், புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகளவு காணப்படுகின்றன. இதன்மூலம் கால்நடைகளுக்கு அடா்தீவன பயன்பாடு குறைந்து, உற்பத்தி செலவு குறைய ஏதுவாகிறது என்று அதில் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.