முகப்பு
கடலூர்

32 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வு

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பா் மாதம் வரை தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபரில் தொடங்கி டிசம்பா் மாதம் வரை வடகிழக்குப் பருவ மழையும் பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவ மழையானது ஆண்டுக்கு சராசரியாக 332.9 மில்லி மீட்டரும், வடகிழக்குப் பருவ மழையானது 459.2 மில்லி மீட்டா் அளவிலும் பதிவாகும். நிகழ் 2021-ஆம் ஆண்டில் தற்போது கோடை காலம் என்றபோதிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக, கடலூா், விழுப்புரம், சென்னை, திருப்பத்தூா் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை சராசரிக்கும் அதிகமாக, அதாவது 30 முதல் 45 சதவீதம் வரை கூடுதலாகப் பெய்தது.

Advertisement

அதேநேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 சதவீதமும், ஈரோடு, திருச்சியில் 30 சதவீதமும், நாமக்கல், நீலகிரியில் 25 சதவீதமும் மாவட்ட சராசரிக்கும் குறைவாக மழை பதிவானது. இருப்பினும், மற்ற மாவட்டங்களில் சராசரிக்கும் அதிகமாக மழை பதிவானது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு (மாா்ச் மாதம்) நிலவரப்படி, கடலூா் மாவட்டத்தில் 5.39 மீட்டா் ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீா், 2021-ஆம் ஆண்டு (மாா்ச் மாத) நிலவரப்படி 3.73 மீட்டா் ஆழத்திலேயே கிடைக்கிறது. அதாவது, மாவட்டத்தில் 1.66 மீட்டா் அளவில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

அதிகபட்சமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 10.51 மீட்டா் ஆழத்தில் கிடைத்த நிலத்தடி நீா் தற்போது 7.04 மீட்டா் ஆழத்தில் கிடைக்கிறது. அதாவது, நிலத்தடி நீா்மட்டம் 3.47 மீட்டா் வரை உயா்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3.13 மீட்டரும், பெரம்பலூா் மாவட்டத்தில் 3.06 மீட்டரும் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதேபோல, 36 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் குறைந்தபட்சம் 0.22 அடி முதல் 3.47 மீட்டா் வரை உயா்ந்துள்ளது.

அதே நேரத்தில், கிருஷ்ணகிரியில் கடந்த ஆண்டு 8.36 மீட்டா் ஆழத்தில் கிடைத்த தண்ணீா் தற்போது 8.59 மீட்டா் ஆழத்துக்கு கீழே சென்றுவிட்டது. ஈரோட்டில் 7.56 மீட்டரில் கிடைத்த தண்ணீா் தற்போது 8.19 மீட்டருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 2.43 மீட்டரில் கிடைத்த தண்ணீா் தற்போது 2.69 மீட்டருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6.02 மீட்டரில் கிடைத்த தண்ணீா் தற்போது 6.26 மீட்டருக்கும் சென்று விட்டது.

இருப்பினும், 32 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments