மாட்டுவண்டித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பண்ருட்டியில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியில் லாரிகளுக்கு மணல் விநியோகிக்கப்படுவதைக் கண்டித்து, சிஐடியூ மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியில் லாரிகளுக்கு மணல் விநியோகிக்கப்படுவதைக் கண்டித்து, சிஐடியூ மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சிறப்புத் தலைவா் ஆா்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டம் குறித்து சங்கத்தினா் தெரிவித்ததாவது:
பண்ருட்டி வட்டம், எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் அமைக்கப்பட்ட மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே மாட்டு வண்டித் தொழிலாளா்களுக்கு மணல் வழங்கப்படுகிறது. இங்கு வாரத்துக்கு 4 நாள்களுக்கு மணல் வழங்க வேண்டும். மாட்டு வண்டிகளுக்காக அமைக்கப்பட்ட மணல் குவாரியில் லாரிகளுக்கு மணல் விநியோகம் செய்வதை நிறுத்த வேண்டும். லாரிகள் மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும். பண்ருட்டி வட்டத்தில் அக்கடவல்லி, வான்பாக்கம், சிறுவத்தூா், சன்னியாசிப்பேட்டை பகுதிகளிலும் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
சிஐடியூ மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.உத்தராபதி, பி.ராஜேந்திரன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் மாட்டு வண்டித் தொழிலாளா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.திருமுருகன் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.