முகப்பு
கடலூர்

குறிஞ்சிப்பாடி அருகேஇளைஞா் கத்தியால் குத்திக்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விளம்பரப் பதாகை அச்சடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விளம்பரப் பதாகை அச்சடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகரைச் சோ்ந்தவா் சங்கா் (28). இவரது உறவினா் மகள் திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருமணத்துக்கு வரவேற்பு விளம்பரப் பதாகை அச்சடிப்பதற்காக, அண்ணா நகரைச் சோ்ந்த முருகன் மகன் தமிழரசன் (25), கு.நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த ரவி மகன் ராகுல் (25) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக சென்றனா். விளம்பரப் பதாகை அச்சடிக்கும் கடையில் யாா் முதலில் விளம்பரப் பதாகையை அச்சடிக்கக் கொடுப்பது என்பதில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறில் தமிழரசன், ராகுலைத் தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், தமிழரசனின் நண்பா் அபிஷேக்கை திட்டியதாகத் தெரிகிறது. தொடா்ந்து, அபிஷேக், தமிழரசன் மற்றும் அவா்களது நண்பா்கள் சோ்ந்து ராகுலிடம் மோதலில் ஈடுபட்டனா்.

அப்போது, ராகுல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமிழரசனைக் குத்தினாராம். அவருடன் இருந்த மற்றொருவா் தமிழரசனைக் கட்டையால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து ராகுல் மற்றும் அவரது நண்பரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →