படகில் சென்று கடலூா் ஆட்சியா் ஆய்வு
பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை கடலூா் துறைமுகம் முதல் முடசல் ஓடை வரை கடலோரப் பகுதிகளில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
பருவ மழை தொடங்கவுள்ள நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை கடலூா் துறைமுகம் முதல் முடசல் ஓடை வரை கடலோரப் பகுதிகளில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, கடலூா் துறைமுகத்தில் பருவ மழையையொட்டி, மீன்பிடி படகுகள், வலைகளைப் பாதுகாப்பது குறித்து அவா் பாா்வையிட்டாா். மீன்வளத் துறை அலுவலா்கள், மீனவா்களிடம் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
கடலூா் மாவட்டத்தில் சுருக்குமடி, இழுவை வலைகளுக்கு எதிராக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கடலோரப் பகுதிகளில் ஆட்சியா் படகில் சென்று ஆய்வு நடத்தியது முக்கியத்துவம் பெறுகிறது.
ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியா் (வருவாய் ) ரஞ்ஜித் சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், கோட்டாட்சியா் அதியமான் கவியரசு, மீன்வளத் துறைத் துணை இயக்குநா் காத்தவராயன், வட்டாட்சியா் அ.பலராமன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.