பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணா்வுப் பேரணி
கடலூா், சிதம்பரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூா், சிதம்பரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு, காவல் துறையினா், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் இணைந்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள், பேரணி உள்ளிட்டவை மூலம் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு அரசு அறிவித்தது. அதன்படி, சனிக்கிழமை கடலூா் நகர அரங்கில் இருந்து புனித. வளனாா் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், தன்னாா்வலா்கள் இணைந்து தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா். மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் பேரணியை தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து, ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை கரோனா விழிப்புணா்வு வாரமாகக் கடைப்பிடிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில், மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் வடக்கு வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே விழிப்புணா்வுப் பேரணியை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தொடக்கிவைத்தாா். பேரணியில் நகராட்சி ஊழியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா் சாா்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.