முகப்பு
கடலூர்

பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் உதவி ஆட்சியர் லி.மதுபாலனிடம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தினமும் 1 கோடி தடுப்பூசி வீதம் இலவசமாக வழங்கிட வேண்டும் என இந்திய குடியரசு தலைவருக்கான கோரிக்கை மனுவை அளித்து பரிந்துரைக்குமாறு வலியுறுத்தினார். பின்னர் அவர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தியா போன்ற மிகப்பெரிய தேசத்தில் அரசுதான் இந்த தடுப்பூசி விஷயத்தில் இலவசத்தை பின்பற்ற வேண்டும். மக்களை அலைகழிக்கக்கூடாது என சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

அதற்காக இன்றைக்கு இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், சென்னை நகரத்திலும் நாங்கள் ஆளுநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து எங்களது கோரிக்கை மனு வழங்கியுள்ளோம். தடுப்பு மருந்து தயாரிப்பதில் 150 ஆண்டு கால அனுபவம் உடைய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. தொடக்கத்திலேயே இவர்களுக்கு அனுமதி கொடுத்திருந்தால், இதுவரை 100 கோடிக்கு மேலான தடுப்பூசிகளை தயார் செய்து நமது மக்களை பாதுகாத்து இருப்பார்கள். இந்த விஷயத்தில் மோடியின் நண்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதே தவிர, பொதுத்துறை நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. சீரம், பாரத் பயோடெக் என்ற இரு நிறுவனங்களுக்கு அளித்தார். இருவருமே தனியார்கள், இருவருமே லாப நோக்கில் செயல்படுகிறார்கள். 

உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம்: உச்சநீதிமன்றம் நீதிபதி சந்திரசூட் தடுப்பு மருந்தை மத்திய அரசு ரூ.150-க்கு வாங்க முடியும். மாநில அரசு ரூ.300-க்கு வாங்க முடியும். தனியார் ரூ.600-க்கு வாங்க முடியும் என்று சொன்னால். இது என்ன கொள்கை என கேட்டுள்ளார். தடுப்பூசி என்பது லாபம் பார்க்ககூடிய நேரம் அல்ல. மிகப்பெரிய தொற்று வந்துள்ள நேரத்தில் தடுப்பூசிக்கு 3 நிலை விலையா என உச்சநீதிமன்ற நீதிபதி கேட்டுள்ளார். மத்திய அரசு ரூ.150க்கு தடுப்பூசி வாங்க முடியும் என்று சொன்னால் ஏன் அவர்கள் மாநில அரசுகளுக்கு ரூ.150-க்கு வாங்கி கொடுத்திருக்கக்கூடாது. இன்றைக்கு தமிழகத்தில் வந்துள்ள புதிய ஆட்சி முதல்வர் பதவியேற்ற அன்றையிலிருந்து கரோனா தடுப்பிற்காக மட்டுமே  செயல்பட்டு வருகிறார். கடுமையாக உழைத்து வருகிறார். அவரை பாராட்டுகிறோம். முதல்வரே சொல்கிறார் மாநில அரசின் மக்கள் தொகைக்கேற்ப எங்களுக்கு தடுப்பூசி வழங்கவில்லை. 

மத்தியஅரசு அதில் முறையான கொள்கையை பின்பற்றவில்லை என கூறுகிறார். இந்த ஒரு முதல்வர் மட்டும் அல்லை. இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி முதல்வர்கள் அனைவருமே கூறுகின்றனர். பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசு நிலையான கொள்கையை கடைபிடிக்கவில்லை. தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்காக அனைத்து எதிர்கட்சிகட்சிகளும் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஏற்பாடு செய்தார்கள், அதனால்தான் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மிகப்பெரிய பிரச்னை என்று வருகிற போது மக்களுடைய நலனுக்காக ஒன்று சேருகிறார்கள். அந்த உணர்வு மத்திய அரசுக்கு இல்லை. இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் தடுப்பூசி உற்பத்தி மையம் வந்திருக்கும். தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டிருக்கப்படும். 

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி: இந்தியாவில் 2 தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 4 சதவீதம்தான். ஒரு தவனை தடூப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 15 சதவீதம்தான். இந்தியவின் மக்கள் தொகை 140 கோடி. இஸ்ரேலில் 70 சதவீதம் பேரும், அமெரிக்காவில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அனைத்து தொழில்நுட்பங்கள் கொண்ட நம்மால் முடியும். நாம் பின்தங்கிய நாடு அல்ல. இன்னும் நூறு கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். அதற்கு 200 கோடி தடுப்பூசி வேண்டும். எனவே மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும். மத்தியஅரசு கொள்முதல் செய்யும் ரூ.150 விலையிலேயே மாநிலஅரசுகளுக்கு கொள்முதல் செய்து வழங்க வேண்டும் அல்லது மாநிலஅரசுகளுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். முடியவில்லை என்றால் மாநிலஅரசுகளுக்கு ரூ.150 விலையில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் . 

மாநிலங்களுக்கு தடுப்பூசி ரூ.300 என்றால், அம்மாநிலங்களுக்கு நிதிசுமையை அதிகரிக்கும். தமிழகத்தில் 8 கோடி மக்கள் உள்ளனர். 85 லட்சம் மக்களுக்காதன் நாம் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளோம். மீதிமுள்ளவர்களுக்கு போட அரசு தயாராக உள்ளது. ஆனால் தடுப்பூசி கிடைக்கவில்லை. இதுதான் இந்தியா முழுவதும் உள்ள நிலை. பிளஸ்டூ தேர்வு நடத்த வேண்டும்: பிளஸ்டூ தேர்வை ரத்து செய்வது என்பது சரியல்ல. ஏனென்றால் அது மாணவர்களது வாழ்க்கையை பாதிக்கும். ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு தேர்வு நடத்துவது பற்றி தமிழகஅரசு மற்றும் மத்தியஅரசு, கல்வியாளர்கள் என அனைவரும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஓராண்டு காலம் அவரது கல்வி பாதிக்கப்பட்டால் வேலை தேடும் சந்தையில் அவர்கள் பின்தங்கிவிடுவார்கள்.

எனவே ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். ஒரு அளவுகோல் வைத்து அவர்களை அமரவைத்து தேர்வு எழுத சொல்லலாம். வீராணம் ஏரியிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி: கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரிக்கு இன்னும் இரண்டு வாரத்தில் நீர் வர உள்ளது. தற்போது வறண்டுள்ள வீராணம் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் செல்ல முதல்வர் மற்றும் அமைச்சர் உத்தரவிட வேண்டும். இந்த வண்டல் மண்ணை எடுத்துச் சென்று வீடு கட்ட முடியாது. வயலுக்குதான் போடுவர்கள். இதனால் வீராணம் ஏரியின் கொள்ளளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். பேட்டியின் போது விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.வி.செந்தில்நாதன், மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் திலகர், மாநில பொதுச்செயலாளர் சேரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →