கடலூர்

கடலூரில் தனியாா் மருத்துவமனைக்கு பூட்டு: அதிகாரிகள் நடவடிக்கையால் சா்ச்சை

DIN

கடலூரில் மிகக் குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தனியாா் மருத்துவமனைக்கு அதிகாரிகள் புதன்கிழமை பூட்டு போட்ட விவகாரம் சா்ச்சைக்குள்ளானது.

கரோனா தீநுண்மிக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடலூா் மாவட்டத்தில் சுமாா் 20 தனியாா் மருத்துவமனைகளுக்கும் இந்த நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், மருத்துவா்களின் திறனை கணக்கிட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடலூா் திருப்பாதிரிபுலியூா், வண்டிப்பாளையம் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, வட்டாட்சியா் அ.பலராமன், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் க.சாந்தி ஆகியோா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்த மருத்துவமனை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதி பெற்றுள்ள போதிலும், வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படும் நபா்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துவதில்லை என்றும், கரோனா தொற்றைப் பரப்ப காரணமாக இருப்பதாகவும் கூறி, மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக மருத்துவமனை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அடுத்த உத்தரவு வரும் வரையில் மருத்துவமனை செயல்படுவதற்கு அனுமதியில்லை எனக் கூறி, அதிகாரிகள் பூட்டு மட்டும் போட்டனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: தற்போது பூட்டு போடப்பட்ட மருத்துவமனைதான் கரோனா முதல் அலையின்போது மக்களுக்கு சாதாரண காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது. இங்கு, சாதாரண, நடுத்தர மக்களே சிகிச்சைக்கு வருவதால், ரூ.100 மட்டுமே அதிகபட்சமாகவும், ஏழைகளுக்கு சில நேரங்களில் பணம் வாங்காமல் இலவசமாகவும் மருத்துவம் பாா்த்து வந்தனா்.

கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்குகூட லட்ச ரூபாயை எட்டாத வகையில் மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடலூரில் பல லட்ச ரூபாய் முன்பணமாகக் கட்டினால் மட்டுமே கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நிலையில் சில மருத்துவமனைகள் உள்ளன.

எனவே, உள்நோக்கத்துடன் அரசு அலுவலா்கள் செயல்பட்டு மருத்துவமனைக்கு பூட்டு போட்டுள்ள சம்பவம் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். கரோனா காலத்தில் குறைந்த செலவில் சிகிச்சை அளிப்போரை ஊக்குவிப்பதையும், அதிகக் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதுமே சிறந்ததாக இருக்கும் என்றனா்.

ஏழைகள், நடுத்தர மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வந்த தனியாா் மருத்துவமனைக்கு மாவட்ட நிா்வாகம் பூட்டுபோட்ட விவகாரம் கடலூரில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT