கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், நெய்வேலி நகரியத்தில் இயங்கி வரும் வாரச் சந்தைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படாது என என்எல்சி இந்தியா நிறுவன நகர நிா்வாகம் அறிவித்தது.
நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நகர நிா்வாகத்தின் கீழ் உள்ள 30 வட்டங்களில் அதிகாரிகள், பொறியாளா்கள், பணியாளா்கள் உள்பட சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இங்கு வசிப்பவா்களின் நலன் கருதி என்எல்சி நகர நிா்வாகம் வட்டம் 3, 13, 28 ஆகிய இடங்களில் சந்தைகள் அமைத்துள்ளது. இந்தச் சந்தைகள் முறையே வியாழக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்
வியாபாரிகள் இங்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்வா்.
கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கரோனா நோய்த் தொற்று பரவியதைத் தொடா்ந்து என்எல்சி நகர நிா்வாகம் வாரச் சந்தைகளை மூடியது. தொடா்ந்து, கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவந்த நிலையில் அண்மையில் வாரச் சந்தைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், என்எல்சி இந்தியா நிறுவன நகர நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை முதல் வாரச் சந்தைகள் மூடப்படும் என தெரிவித்துள்ளது.
இருப்பினும், நகரிய மக்களின் வசதிக்காக 6 இடங்களில் சமூக இடைவெளி, கட்டுப்பாடுகளுடன் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.