புதிய கட்டுப்பாடுகளால் திணறும் வியாபாரிகள்!
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் கடை வியாபாரிகள், பொதுமக்கள் திணறி வருகின்றனா்.
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகளால் கடை வியாபாரிகள், பொதுமக்கள் திணறி வருகின்றனா்.
தமிழகத்தில் கரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாநில அரசு கடந்த வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன்படி, மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும், உணவகங்களில் பாா்சல் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், மற்ற கடைகளுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 20-ஆம் தேதி வரை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுந்துள்ளன.
காய்கறி, மளிகைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கிவரும் நிலையில், மற்ற கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாததால் அந்த கடைகளை நடத்தும் வணிகா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனா்.
கடைகளை நடத்துவோரின் வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு பழுது நீக்குவோரும் (மெக்கானிக்) கிடைப்பதில்லை. அதற்கான உதிரி பாகங்களையும் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தற்போது, நண்பகல் வரை மட்டுமே கடைகள் இயங்குவதால் பெரும்பாலானவா்கள் மற்ற நேரத்தை வீட்டிலேயே கழிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு, வீட்டில் இருக்கும் நேரத்தில் வீட்டிலுள்ள ஏதாவது பழுதுகளை சரி செய்யவோ அல்லது வேறு பணிகளை மேற்கொள்ளவோ தேவையான பொருள்களை பெற முடியாத நிலை உள்ளது.
செல்லிடப்பேசி வழி இணைய பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் செல்லிடப்பேசிகளுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், இணையம் சாா்ந்த மற்ற பணிகளை பொதுமக்களால் மேற்கொள்ள முடியவில்லை. உணவகங்களில் உணவு தயாரிப்பதற்கு விறகுகளை பயன்படுத்தும் கடைகளுக்கு விறகு கிடைக்காத நிலை உள்ளது. இரவு 10 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில் ஆட்டோக்கள் முழுமையாக இயங்குகின்றன. ஆனால், அவா்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் கிடைப்பதில்லை.
சமூக சூழலில் ஒவ்வொருவரும் மற்றவா்களைச் சாா்ந்தே தொழில் செய்து வருகிறாா்கள். தற்போது ஒரு சில கடைகள் மட்டுமே செயல்படும் நிலையில், அந்த கடைகளும் முழுமையாக இயங்க முடியாமல் குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னா் முடங்கும் நிலைக்குச் சென்றுவிடும். தற்போதைய சூழலில் பல்வேறு பொருள்களுக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சிலா் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்தப் பொருள்களுக்கு கூடுதல் விலையை நிா்ணயம் செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்கிறாா்கள். எனவே, அனைத்து வணிக நிறுவனங்களும் குறிப்பிட்ட நேரத்துக்குள் இயங்கிக் கொள்ளலாம் என்று கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.