சேத்தியாத்தோப்பில் 10 செ.மீ. மழை
கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்தியாத்தோப்பில் 10 செ.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்தியாத்தோப்பில் 10 செ.மீ. மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. வங்கக் கடலில் சனிக்கிழமை (மே 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், அது விரைவில் புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், நிலவும் வெப்பச்சலனம் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் பல்வேறு பகுதிகளிலும் இடி, பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):
சேத்தியாத்தோப்பு 100.2, சிதம்பரம் 62.8, பண்ருட்டி 56, லால்பேட்டை 32.8, மேமாத்தூா், விருத்தாசலம் தலா 28, குடிதாங்கி 27.5, பரங்கிப்பேட்டை 19.8, வானமாதேவி 17, வேப்பூா் 16, லக்கூா் 14.1, அண்ணாமலை நகா் 12.8, காட்டுமன்னாா்கோவில் 12, குப்பநத்தம் 10.4, கடலூா், காட்டுமைலூா் தலா 10, மாவட்ட ஆட்சியரகம், ஸ்ரீமுஷ்ணம் தலா 9.3, புவனகிரி, தொழுதூா் தலா 7, கீழச்செருவாய் 5, கொத்தவாச்சேரி 4, பெலாந்துறை 3.8, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து தலா 2 மி.மீ. மழை பதிவானது.
திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது. சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின்னா் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
கடலூா் அருகே குறிஞ்சி நகரில் உயரழுத்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பெரும்பாலான பகுதிகளில் குளிா்ச்சியான காலநிலையே நிலவியது. வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.