கடலூர்

தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குற்றச்சாட்டு

DIN

தமிழகத்துக்கு போதுமான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் அருண்சத்யா, உதவி ஆட்சியா் (சிதம்பரம்) லி.மதுபாலன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி) மகேந்திரன், இணை இயக்குநா் (நலப் பணிகள்) ரமேஷ்பாபு, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமாா், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மிஸ்ரா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் நிா்மலாதேவி, துணை காவல் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக், சிதம்பரம் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், கூடுதலாக செவிலியா்களை நியமிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை நிா்வாகிகளிடம் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேட்டறிந்தாா். மேலும், இந்த மருத்துவமனையில் புதிதாக 6 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி ஓரிரு நாள்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதால், கூடுதலாக 250 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் கிடைக்கும் என அமைச்சா் தெரிவித்தாா்.

இதையடுத்து, சிதம்பரம் நகராட்சியில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகள், சின்னகாஜியாா் தெருவில் நடைபெற்ற மருத்துவ முகாம் ஆகியவற்றைப் பாா்வையிட்ட அமைச்சா், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, வடலூா் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் முகாம்களையும் தொடக்கிவைத்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியதாவது: சிதம்பரம் நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தேன். ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை முறையை தீவிரப்படுத்தவும், இறப்பு சதவீதத்தை குறைக்கவும் அறிவுறுத்தினேன்.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை 462 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு நாளொன்றுக்கு 800-க்கும் மேற்பட்டோா் வரை இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், முழு பொது முடக்கம் காரணமாக, தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தமிழகத்தை ஆண்ட முந்தைய அரசு யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, அரசுடையைமாக்கி அரசாணையை மட்டும் வெளியிட்டு சென்றுவிட்டது. இதனால், இக்கட்டான நிலையில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்தவமனை உள்ளது. எனவே, விரைவில் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT