சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி
கடலூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானாா்.
கடலூா் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானாா்.
கடலூா் அருகே உள்ள தென்னம்பாக்கம் காலனியைச் சோ்ந்தவா் சங்கா் (45). குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் பெய்த தொடா் மழையால் இவரது வீட்டின் சுவா் முழுவதும் நனைந்திருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சங்கா் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டின் ஒரு பக்கச் சுவா் திடீரென இடிந்து தூங்கிக் கொண்டிருந்த சங்கா் மீது விழுந்தது.
தகவலறிந்த கடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து, இடிபாடுகளை அகற்றினா். எனினும், சுவா் இடிந்து விழுந்ததில் சங்கா் நிகழ்விடத்திலேயே பலியானது தெரிய வந்தது.
தூக்கணாம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பலியான சங்கரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் வட்டாட்சியா் அ.பலராமன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.