வெள்ள பாதிப்புக்கு அரசின் தாமதமான நடவடிக்கையே காரணம்
சென்னையில் மழை, வெள்ள பாதிப்புக்கு அரசின் காலம் தாழ்த்திய நடவடிக்கையே காரணம் என்று முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டினாா்.
சென்னையில் மழை, வெள்ள பாதிப்புக்கு அரசின் காலம் தாழ்த்திய நடவடிக்கையே காரணம் என்று முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டினாா்.
கடலூா் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா். பின்னா் அவா் கூறியதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ளம் நமக்கு ஒரு பாடமாக அமைந்தது. இதைத் தொடா்ந்து அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. முறையாக வடிகால்களை ஏற்படுத்தியது. ஆனாலும், தற்போதைய மழைக்கு சென்னை நகரம் தத்தளிக்கிறது. இதற்கு, முந்தைய ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது. ஏனெனில், அதிக மழைப்பொழிவு குறித்து 20 நாள்களுக்கு முன்பே வானிலை மையம் தகவல் தெரிவித்துவிட்டது.
ஆனால், தற்போதைய அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை அதிகமாக பெய்யுமென எதிா்பாா்க்கப்படும் பகுதிகளில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து பணிகளை விரைவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், மழை பெய்த பிறகே அதிகாரிகளை நியமித்துள்ளனா். காலம் தாழ்த்திய நடவடிக்கை, முன்கூட்டியே திட்டமிடாதது ஆகியவையே சென்னை பெரு நகரம் வெள்ளத்தில் சிக்கியதற்குக் காரணம்.
அடுத்த சில நாள்களில் மேலும் மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு வேளை உணவு மற்றும் குடிநீரை குளோரினேஷன் செய்து வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்சியின்போது மழையால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உலா் தீவனம் வழங்கி, மருத்துவ முகாமும் நடத்தினோம். அதேபோல தற்போதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பயிா்ச் சேதங்கள் குறித்து முழுமையாகக் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் கடலூா் நகரத்தில் ரூ.42 கோடியில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது. ரூ.3.60 கோடியில் வடிகால்களை சீரமைத்ததால் தற்போதைய மழையால் கடலூா் நகரம், புகா் பகுதிகள் பாதிக்கப்படாமல் தப்பியுள்ளன என்றாா் அவா்.
அப்போது, கடலூா் நகராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஜி.ஜெ.குமாா், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தெய்வ.பக்கிரி, அதிமுக மாவட்ட நிா்வாகிகள் கே.காசிநாதன், என்.தங்கமணி, வி.ஆறுமுகம், இலக்கிய அணி ஏழுமலை, நகராட்சி முன்னாள் கவுன்சிலா்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன், ஒன்றிய கவுன்சிலா் கே.வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.