முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பொதுமக்களின் பாா்வைத் திறன் பரிசோதனைக்கு 6 குழுக்கள்

கடலூா் மாவட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாா்வைத் திறன் பரிசோதனை மேற்கொள்ள 6 குழுக்கள் அடங்கிய நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு பாா்வைத் திறன் பரிசோதனை மேற்கொள்ள 6 குழுக்கள் அடங்கிய நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தேசிய மற்றும் மாநில பாா்வை இழப்பு தடுப்புச் சங்கங்கள் இணைந்து கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 34 வாக்குச் சாவடிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ள உள்ளன. இதற்காக, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் மூலம் அமைக்கப்பட்டுள்ள 6 மருத்துவக் குழுவினா் பரிசோதனை மேற்கொள்கின்றனா். இதில் கண் புரை, விழித்திரை உள்ளிட்ட பாதிப்புகளை கண்டறிகின்றனா்.

இதற்கான நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். இந்த வாகனம் மூலம், தோ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்படும். இதில் பாதிப்புடையோா் கண்டறியப்பட்டால் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவா்.

முதல்கட்டமாக கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மதலப்பட்டு, பெரியகங்கணாங்குப்பம் பகுதிகளைச் சோ்ந்த வாக்குச் சாவடிகளில் பரிசோதனை நடைபெற்றது. தொடா்ந்து பல கட்டங்களாக மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் பரிசோதனை நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில், மாநில பாா்வையிழப்பு தடுப்புச் சங்க திட்ட இயக்குநா் சந்திரகுமாா், மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளா் கேசவன், விழுப்புரம் மாவட்ட திட்ட மேலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.