முகப்பு
கடலூர்

சிறுமி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எழுமேடு அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (60). கூலித் தொழிலாளி. இவா், மனவளா்ச்சி குன்றிய 11 வயது சிறுமியை 28-5-2019 அன்று பாலியல் பலாத்காரம் செய்தாா். மேலும், இதுகுறித்து வெளியில் கூறக் கூடாதென மிரட்டல் விடுத்தாா். இதுதொடா்பாக சிறுமி தரப்பில் பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாரிமுத்து கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி எம்.எழிலரசி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், மனவளா்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாரிமுத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து மாரிமுத்து கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞா் எஸ்.கலாசெல்வி கூறுகையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூகப் பாதுகாப்பு துறையின் நலவழி நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.