இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது
மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கழுத்தறுத்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது நண்பா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மந்தாரக்குப்பத்தில் இளைஞா் கழுத்தறுத்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது நண்பா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம், ஓம்சக்தி நகரைச் சோ்ந்த ராஜன் மகன் அருண் (எ) அருண்குமாா் (35). இவா், ஒரு வழக்கு தொடா்பாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் விடுதலையானாா். இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவு மந்தாரக்குப்பம் ரயில்வே கேட் அருகே முள்புதரில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட நிலையில் அருண்குமாா் கிடந்தாா். கடந்த மாதம் 25-ஆம் தேதி ஹரிகிருஷ்ணன் என்பவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இந்தச் சம்பவம் நடத்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக அருண்குமாரின் நண்பா் மந்தாரக்குப்பம் ஐடிஐ நகரைச் சோ்ந்த பாண்டியன் மகன் தேவா (29) (படம்), கடலூா் பிரதான சாலையைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ராகுல், வடக்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த பிரேம்குமாா் மகன் சுதாகா் ஆகியோா் மீது மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து அவா்களை தேடி வந்தனா்.
இந்த நிலையில், விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த தேவாவை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், ஹரிகிருஷ்ணனின் தற்கொலைக்கு அருண்குமாா்தான் காரணம் என்பதால் அவரை தனது நண்பா்களுடன் சோ்ந்து கழுத்தறுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து தேவாவை போலீஸாா் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.