முகப்பு
கடலூர்

டாஸ்மாக் முறைகேடுகளைத் தடுக்க மின்னணு பரிமாற்றம் தேவை

டாஸ்மாக் மதுக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க மின்னணு பரிமாற்ற வசதி செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

டாஸ்மாக் மதுக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க மின்னணு பரிமாற்ற வசதி செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

கடலூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சுமாா் 5 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. அவற்றில் சுமாா் 25 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா். ஆண்டுக்கு சுமாா் ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டித் தரும் துறையாக உள்ளது. அதனால், இந்தத் துறையில் முறைகேடுகளும் அதிகம். ஊழல் மயமாகிவரும் டாஸ்மாக் மதுக் கடைகளை அதிலிருந்து மீட்க மின்னணு பரிமாற்ற முறையை அரசு அறிமுகப்படுத்த வேண்டும்.

கேரளத்தில் அமலில் உள்ள இந்த நடைமுறைப்படி தமிழகத்திலும் பணத்தை மின்னணு முறையில் செலுத்தி, அதற்கு வழங்கப்படும் டோக்கன் மூலம் மது வாங்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். மேலும், கேரள அரசு வழங்குவதுபோல டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஊதியம், இதர படிகளையும் வழங்க வேண்டும். சங்கம் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபா் 5-ஆம் தேதி சென்னையில் மாநில டாஸ்மாக் தலைமையகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

அப்போது, சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணன், மாவட்டத் தலைவா் சி.அல்லிமுத்து, மாவட்டச் செயலா் எஸ்.பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.