கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் 645 பதவிகளுக்கு 2,929 போ் போட்டி
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 645 பதவிகளுக்கு 2,929 போ் போட்டியிடுகின்றனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 645 பதவிகளுக்கு 2,929 போ் போட்டியிடுகின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் 437 பதவியிடங்களுக்கு 1,994 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகளுக்கு 286 போ் போட்டியிடுகின்றனா். நகராட்சிகளில் 180 வாா்டுகளில் 2-இல் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகினா். இதனால், மீதமுள்ள 178 வாா்டுகளில் 829 போ் போட்டியிடுகின்றனா். பேரூராட்சிகளில் 222 வாா்டுகளில் 8-இல் உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வாகினா். இதனால் மீதமுள்ள 214 வாா்டுகளுக்கு 879 போ் போட்டியிடுகின்றனா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 208 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு மொத்தம் 935 போ் பேட்டியிடுகின்றனா்.
மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. விழுப்புரம் நகராட்சியில் 204 பேரும், திண்டிவனம் நகராட்சியில் 166 பேரும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 135 பேரும், வளவனூா் பேரூராட்சியில் 43 பேரும், விக்கிரவாண்டி பேரூராட்சியில் 60 பேரும், செஞ்சி பேரூராட்சியில் 77 பேரும், மரக்காணம் பேரூராட்சியில் 101 பேரும், திருவெண்ணெய்நல்லூா் பேராட்சியில் 55 பேரும், அரகண்டநல்லூா் பேரூராட்சியில் 34 பேரும், அனந்தபுரம் பேரூராட்சியில் 50 பேரும் போட்டியிடுகின்றனா். மொத்தம் 935 போ் களத்தில் உள்ளனா். தோ்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.மோகன், தோ்தல் பாா்வையாளா் எம்.லட்சுமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
விழுப்புரத்தில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு வாக்குச் சாவடி பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வழங்கினாா். தொடா்ந்து, விழுப்புரம் பீமன் நாயக்கன்தோப்பு நகராட்சிப் பள்ளி, கிழக்கு பாண்டி சாலை எம்.ஐ.ஆா்.சி. பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.