வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தற்கொலை
கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
கடலூா் கோண்டூரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். கடலூரிலுள்ள அரசு சேவை இல்லத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி வாணி (38). கோபாலகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ள நிலையில், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை கோபாலகிருஷ்ணன் தனது வேலையை முடித்தபிறகு வீட்டுக்கு வந்தாா். அப்போது, சமையலறையில் புடவையால் தூக்கிட்ட நிலையில் வாணி கிடந்தாா். அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: பண்ருட்டி வட்டம், தாழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராசாங்கம் மகன் தெய்வசிகாமணி (45). பலா பழ வியாபாரியான இவா், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன உளைச்சலில் இருந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.