சிதம்பரத்தில் நிற்காத ரயில்கள்: மத்திய அமைச்சருக்கு மனு
சிதம்பரம் ரயில் நிலையத்தில் கம்பன் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் கம்பன் விரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு பாஜக முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநிலச் செயலரும், ரயில்வே கமிட்டி உறுப்பினருமான ஜி.பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் அனுப்பியுள்ள கடிதம்: சிதம்பரம் நகருக்கு வந்து செல்லும் பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பெங்களூா்- காரைக்கால், காரைக்கால் - பெங்களூா் ரயில் (வண்டி எண்- 56513, 56514) நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மயிலாடுதுறை-விழுப்புரம், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயிலை (56876-56875) மீண்டும் இயக்க வேண்டும். மேலும், கம்பன் விரைவு ரயில் (16175-16176), சேது சாரதா, ராமேசுவரம் - அலகாபாத், அலகாபாத்-ராமேசுவரம் ரயில் (16793- 16794) ஆகியவை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம் வழியாகச் செல்லும் அந்தியோதயா விரைவு ரயிலை (16189-16190) மீண்டும் இயக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.